பதிவு செய்த நாள்
05
ஜூன்
2022
08:06
மதுரை: வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பல சிலைகளை, பிரதமராக வந்த பின் மோடி மீட்டுள்ளார். அவரிடம் தேவாரம் பாடிக் காண்பித்தேன். இதைக் கேட்ட பிரதமர் கண்ணீர் விட்டார். நாட்டிற்கு நல்ல பிரதமர் கிடைத்துள்ளார், என, மதுரையில் நடந்த துறவியர் மாநாட்டில் மதுரை ஆதீனம் பேசினார். விஸ்வ ஹிந்து பரிஷத், அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை சார்பில் இரண்டு நாள் துறவியர் மாநாடு, மதுரை பரவை ஆகாஷ் பேமிலி கிளப்பில் துவங்கியது.
இன்று திசை மாறுகிறது : சிறப்பு விருந்தினர்களை மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சுதாகர் அறிமுகம் செய்தார். வரவேற்புக்குழு செயலர் நாகேந்திரன் வரவேற்றார். வி.எச்.பி., அகில உலக இணை பொதுச்செயலர் ஸ்தாணுமாலயன் பேசியதாவது:பாரத தேசத்தில் புராண காலத்திலிருந்து தவத்தால் சமூகத்தை நல்வழிப்படுத்துபவர்கள் ரிஷிகள். தெய்வீக தமிழகமாக இருந்தது இன்று திசை மாறுகிறது.
தமிழகத்தில் வரும் ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்க உள்ளோம். அதற்கான வேலையை செய்ய வேண்டும். அப்பணியை, சிவபெருமான் பாதம் பட்ட மண், பிட்டுக்கு மண் சுமந்த இடம், திருஞான சம்பந்தர் மதமாற்றத்தில் ஈடுபட்ட மதுரையிலிருந்து துவக்குகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை ஆதீனம் ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமி பேசியதாவது:மத சார்பற்ற நாடு என்கிறோம். மசூதிகள் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் கோவில்கள், அறநிலையத் துறையின் கீழ் உள்ளன. இவற்றை தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கக் கோரி, பல கட்ட போராட்டங்கள் நடத்தினோம்.
நாட்டிற்கு நல்ல பிரதமர் : கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விபூதியை பூச மாட்டோம் என்கின்றனர். கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில், ஒரு அமைச்சருக்கு விபூதி பூசப்பட்டது. அதை அவர் அழித்து விட்டார். இதைக் கேட்டால் என்னை சங்கி, மங்கி என்கின்றனர். நான் சங்கியும் இல்லை; மங்கியும் இல்லை. சமயத்திற்காக பாடுபடுகிறேன்.வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பல சிலைகளை, பிரதமராக வந்த பின் மோடி மீட்டுள்ளார். அவரிடம் தேவாரம் பாடிக் காண்பித்தேன். இதைக் கேட்ட பிரதமர் கண்ணீர் விட்டார். நாட்டிற்கு நல்ல பிரதமர் கிடைத்துள்ளார். ஹிந்து கடவுள்களை சிலர் விமர்சிக்கின்றனர். மாற்று சமயம் பற்றி, சினிமாவில் ஒரு காட்சி வந்தால், அதற்கு எதிராக உடனே எதிர்வினையாற்றுகின்றனர்.ஆங்கிலேயர் ஆட்சியில் கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களுக்கு குத்தகை, வாடகையை சம்பந்தப்பட்டோர் முறையாக செலுத்தினர். காங்., - தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிகளில் குத்தகை, வாடகையை முறையாக செலுத்த தவறி விட்டனர். இதனால் கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
வாடகை பாக்கி : திருத்துறைப்பூண்டியில் ஒரு கோவிலுக்கு சொந்தமான சொத்தை அனுபவிக்கும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர், 21 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளார். அக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டப் போவதாக மிரட்டினார். இதைப்பற்றி பேசினால், தடாலடியாக எதிர்ப்பதாக கூறுகின்றனர். எதிர்ப்பை சமாளிக்கும் நிலையில் உள்ளோம். இதற்காகபிரதமர் மோடியை சந்தித்து பேசும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.இதை கேள்வி கேட்காமல், பதுங்கி கிடக்க வேண்டுமா? என்னால் ஜால்ரா அடிக்க முடியாது! ஹிந்துக்களிடம் ஒற்றுமை, நம்பிக்கை, துணிவு இல்லை. இவற்றை ஏற்படுத்த வேண்டும். இதற்காகவும், கோவில்களை பாதுகாக்கவும் கிராமங்கள் தோறும் செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இன்று மாலை 5:00 மணிக்கு, மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே நிறைவு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. வி.எச்.பி., அகில உலக பொதுச்செயலர் மிலிந்த் ப்ராண்டே பங்கேற்கிறார். தீர்மானங்கள் நிறைவேற்றப்படஉள்ளன.