விருதுநகர்: விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று பக்தர்களின் சரணகோஷம் முழங்க தேரோட்டம் நடந்தது.
மே 31ல் துவங்கிய பொங்கல் திருவிழாவில் தினசரி அம்மன் நகர்வலம், பல்லக்கு பவனி, சிங்கார ஊஞ்சல் உற்ஸவங்கள் நடந்து வருகின்றன. பக்தர்கள் கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல் போன்ற நேர்த்தி கடன்களை செலுத்தினர். இந்நிலையில் நேற்று சிறிய தேரில் விநாயகர், பெரிய தேரில் சகோதரிகளான பராசக்தி மாரியம்மன், வெயிலுகந்தம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அம்மன் திடலில் துவங்கிய தேரோட்டம் தேரடி, மெயின் பஜார், தெற்கு ரத வீதி வழியே நகர்வலம் வந்து நிலையம் சேர்ந்தது. நாளை அம்மன் மஞ்சள் நீராடி கொடியிறக்குதலும், நாளை மறுநாள் வான வேடிக்கையொடு விழா நிறைவு பெறுகிறது.