பதிவு செய்த நாள்
12
ஜூன்
2022
01:06
திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவில் தேர் வீதியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள கோவில் நிர்வாகம், அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.திருத்தணி முருகன் மலைக்கோவிலில், 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஆண்டுக்கு ஒரு முறை, கோவில் நிர்வாகம் ஏலம் விடுகிறது.குறிப்பாக தேர் வீதியின் கிழக்குப்புறத்தில், புறக்காவல் மைய அறை, அர்ச்சனை பொருட்கள் விற்பனை, படம் விற்பனை கடை, குளிர்பான கடை என, ஐந்து கடைகள் உள்ளன. இந்த கடைகள், நடப்பாண்டில் ஏலம் விடப்படவில்லை.இதற்கு காரணம், ஐந்து கடைகளை அகற்றி, தேர் வீதியை விரிவுபடுத்த தீர்மானித்துள்ள கோவில் நிர்வாகம், அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.இது குறித்து, திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:முருகன் மலைக்கோவிலில் உள்பிரகாரம் மற்றும் வெளி பிரகாரம் தேர் வீதி, தற்போது யு வடிவில் உள்ளது. இந்த தேர் வீதி, செவ்வக வடிவில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்காக, கிழக்குப்புறத்தில் உள்ள ஐந்து கடைகளை அகற்றி, தேர் வீதியை அகலப்படுத்த உள்ளோம். மேலும், அங்கு மூன்று அடுக்கு அன்னதான கூடம், மின் துாக்கி வசதி மற்றும் கோவில் அலுவலகம் போன்ற பெருந்திட்ட வளாகம் அமைக்கப்பட உள்ளது.இதற்கான வரைபடம் தயாரிக்கும் பணி, தற்போது நடந்து வருகிறது. வரைபட பணிகள் முடிந்தவுடன், அரசுக்கு பரிந்துரை செய்து, தேர் வீதியை அகலப்படுத்தி, மேற்கண்ட கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.