மயிலாடுதுறை : குத்தாலம் அருகே ராஜகோபாலபுரம் கம்பர் காலனி அரச மரத்தடியில் அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக கோவில் வளாகத்தில் கணபதி ஹோமமும், விக்னேஸ்வர பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு காலை 9 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் ஆஞ்சநேயர் கோவில் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி பட்டாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட பிரசாதம் பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ராஜகோபாலபுரம் கிராமவாசிகள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.