பதிவு செய்த நாள்
14
ஜூன்
2022
04:06
சென்னை : ”அரசு கட்டடங்கள் கட்ட, கோவில் நிலங்களை தேர்வு செய்யக்கூடாது,” என பொறியாளர்களுக்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு உத்தரவிட்டுள்ளார்.சென்னை மண்டல பொதுப்பணித்துறை வாயிலாக, பல்வேறு அரசு அலுவலக கட்டடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை கட்டப்பட்டு வருகின்றன.
இப்பணிகள் தொடர்பாக, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வு செய்தார்.அப்போது, அதிகாரிகளிடம் அவர் பேசியதாவது: எழில்மிகு தோற்றம் தரமிக்க கட்டடம் என்பதே பொதுப்பணித் துறையின் குறிக்கோளாக இருக்க வேண்டும். நில எடுப்பிற்கு, நிலத்திட்ட அட்டவணை தயாரிக்கும் போது, திட்டப் பணிகளுக்கு தகுதியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். சரியான இடம் தேர்வு செய்யப்படாததால், பல இடங்களில் கட்டுமான பணியில் தாமதம் ஏற்படுகிறது. கட்டடம் கட்ட கோவில் நிலங்களை தேர்வு செய்யக்கூடாது. திட்ட மதிப்பீடு தயார் செய்யும் போது, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் குறிப்பிட வேண்டும். திருத்திய மதிப்பீடு என, 10 சதவீதத்திற்கு மேல் நிர்வாக அனுமதி கேட்கும் அலுவலர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேலுார் விளையாட்டு மைதானம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் இழுபறியாக உள்ளன. இப்பணியை ஜூலை 27க்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு வேலு பேசினார். இதில், பொதுப்பணித்துறை செயலர் தயானந்த் கட்டாரியா, முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.