பதிவு செய்த நாள்
14
ஜூன்
2022
04:06
அன்னுார்: தாசபாளையம், சக்தி வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கஞ்சப்பள்ளி ஊராட்சி, தாசபாளையத்தில், பழமையான சக்தி வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக் கோவில் பலருக்கு குலதெய்வமாக விளங்குகிறது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இதையடுத்து பல திருப்பணிகள் செய்யப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டு, கும்பாபிஷேக விழா கடந்த, 12ம் தேதி காலை விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது.மதியம் தீபாராதனையும், மாலையில் கோவிலில் இருந்து தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வருதலும், இரவு முதற்கால வேள்வி பூஜையும் நடந்தது. நேற்று அதிகாலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், காலை 10:00 மணிக்கு, விமான கோபுரம், சக்தி வீரமாத்தி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்துக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து மகா அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.