பதிவு செய்த நாள்
14
ஜூன்
2022
04:06
காரைக்குடி: தமிழகத்தில், நடைபெறவுள்ள பவுர்ணமி திருவிளக்கு பூஜைக்கு காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் தேர்வானதையொட்டி இன்று திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் 108 திருவிளக்கு பூஜை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது அதற்காக தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 12 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில், பண்ணாரி அம்மன் கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில், சென்னை காளிகாம்பாள் கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் ஆகிய 12 கோயில்கள் இடம் பெற்றுள்ளன. திருவிளக்கு பூஜையில், பித்தளை விளக்கு, குங்குமச்சிமிழ், பூக்கள், தேங்காய், பழம், தாலிக்கயறு செட், புடவை, ஜாக்கெட் உட்பட ரூ.800 மதிப்புள்ள 22 பொருட்கள் இடம் பெறுகின்றன. திட்ட செலவில் நான்கில் ஒரு பங்காக ரூ.200மட்டுமே பக்தர்களிடம் கட்டணமாக பெற.
உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் திருவிளக்கு பூஜை, பவுர்ணமி தினமான இன்று மாலை நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருவிளக்கு பூஜையை தொடங்கி வைக்கிறார். பூஜையில் கலந்து கொள்பவர்களின் புகைப்படம், முகவரி, அலைபேசி எண், ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கூடிய பட்டியல் அந்தந்த கோயில்களில் பராமரிக்கப்பட வேண்டுமெனவும், ஒரு பூஜையில் கலந்து கொண்டவர்கள், மீண்டும் பூஜையில் கலந்து கொள்வதை இயன்ற வரை தவிர்க்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.