பதிவு செய்த நாள்
17
ஜூன்
2022
06:06
தேனி : தேனி மாவட்டம் வயல்பட்டி ஸ்ரீராமபுரத்தில் அமைந்துள்ள சீதா லட்சுமண சமேத, ராமச்சந்திர சுவாமி, ஹனுமந்தராயர் கோயில் மஹா கும்பாபிஷேகம் இன்று காலை 9:00 மணிக்கு நடக்கிறது.
இக்கோயில் விஜயநகர சாம்ராஜ்ய மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தை சேர்ந்த புராதான சிறப்புமிக்க திருக்கோயிலாகும். இங்கு ராமர், லட்சுமணர், சீதா தேவி, அனுமனுடன் கையில் வில் ஏந்தியவாறு, பட்டாபிஷேக கோலத்தில் அருள்பாலிக்கிறார். கோயிலில் உள்ள மூலவர் சிலைகள் மணியோசை கற்களால் செய்யப்பட்டுள்ளது. இங்கு பட்டாபிஷேக கோலத்தில் உள்ள ஸ்ரீராமரை வணங்கினால் அருள், பொருள், மக்கள் செல்வம் கிடைத்து வம்சம் தழைத்து வளரும் என்பது ஐதீகம். ராம நவமி, அனுமன் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனைகள் நடந்து வருகின்றன. இக்கோயில் சத்திரப்பட்டி, வயல்பட்டி கிராமத்தை சேர்ந்த அனைத்து சமூதாய மக்களுக்கும் குல தெய்வமாக உள்ளது. 1927ல் கும்பாபிஷேகம் நடந்தது,அதன்பின் 95 ஆண்டுகளுக்கு பின் இன்று கும்பாபிஷேகம் நடக்க உள்ளது என கிராம தலைவர் குபேந்திரபாண்டியன் தெரிவித்தார். கோயில் திருப்பணிகள், கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஏ.சி.வி., மில்ஸ் சந்திரசேகரன் செய்துள்ளனர்.