பதிவு செய்த நாள்
17
ஜூன்
2022
06:06
திருப்போரூர்:நெல்லிக்குப்பம் வேண்டவராசி அம்மன் கோவிலில், 15 ஆண்டுகளுக்கு பின் இன்று, கும்பாபிஷேகம் நடக்கிறது.திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் கிராமத்தில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேண்டவராசி அம்மன் கோவில் உள்ளது.
ஆண்டுதோறும் ஆடி திருவிழா, புரட்டாசி நவராத்திரி விழா, இக்கோவிலில் சிறப்பாக நடைபெறும்.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள், அம்மனை வழிபட வருகின்றனர்.இக்கோவிலில் கடைசியாக 2007ல் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் ராஜகோபுரம் உள்ளிட்ட பல்வேறு சன்னிதிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டன.கடந்த 2020ல், கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த, வேண்டவராசி அம்மன் கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக, அம்மன் மூலவர் விமானம், உற்சவர் விமானம், ராஜகோபுரம் உள்ளிட்டவற்றுக்கு வண்ணம் தீட்டப்பட்டு, புதுப்பொலிவடைந்தன.கோவில் வளாகத்தில் விநாயகர், முருகர், துர்கை, வெங்கடேச பெருமாள் மற்றும் நவக்கிரஹ சன்னிதிகளுக்கு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் முடிந்ததையடுத்து, கோவிலில் இன்று, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக, கோவில் வளாகம் முழுதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.கடந்த 14ல் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து பூஜை, கோமாதா பூஜை, சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. இன்று காலை 9:00 மணிக்கு, கோபுரம் உட்பட அனைத்து சன்னிதிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.இரவு, இன்னிசை கச்சேரி, திருவீதி உலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை, நெல்லிக்குப்பம் அன்னை வேண்டவராசி சேவா அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.