மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே புதிதாக அமைத்துள்ள, செல்வ விநாயகர் கோவிலில், இன்று நன்னீராட்டு விழா நடைபெறுகிறது.
சிறுமுகை ஆலாங்கொம்பு அருகே ஜெயமங்களா அவென்யு குடியிருப்பில், புதிதாக சர்வசித்தி செல்வ விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் நன்னீராட்டு விழா, நேற்று விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் குடங்களும், முளைப்பாரி எடுத்து வந்து கோவிலை சுத்தம் செய்து வழிபாடு செய்தனர். மாலையில் முதல் கால வேள்வி பூஜை துவங்கியது. இரவு சுவாமிகளின் திருமேனியை பீடத்தில் நிறுவி, எண் வகை மருந்து சாற்றினர். இன்று காலை ஆறு மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து காலை, 7:30 மணியிலிருந்து, 8:30 மணிக்கு யாக சாலையில் இருந்து, தீர்த்த குடங்களை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து, சர்வசித்தி செல்வ விநாயகர் சுவாமி மீது தீர்த்தம் ஊற்றி, நன்னீராட்டு செய்ய உள்ளனர். அதைத்தொடர்ந்து சாய்பாபா பஜனா மண்டலி துவக்க நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. சாந்தலிங்கர் அருள்நெறி மன்ற சிவநெறித் தொண்டர்கள் குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் யாக வேள்வி பூஜைகளை செய்தனர். விழா ஏற்பாடுகளை ஜெயமங்களா அவென்யூ குடியிருப்போர் நல சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திகள் செய்திருந்தனர்.