பதிவு செய்த நாள்
18
ஜூன்
2022
08:06
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே கொங்காலம்மன் மற்றும் கோவிந்தராஜ பெருமாள் கோவில்களில் நன்னீராட்டு பெருவிழா நடந்தது.
மேட்டுப்பாளையம் அடுத்த மோத்தேபாளையத்தில், கொங்காலம்மன் கோவிலும், கோவிந்தராஜ பெருமாள் கோவிலும் உள்ளன. இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டன. நன்னீராட்டு பெருவிழா கடந்த, 15ம் தேதி பிள்ளையார் வழிபாடு உடன் தொடங்கியது. முதற்கால வேள்வி பூஜைகள் நடந்தன. 16 ம் தேதி காலையில் கோபுரத்தில் விமான கலசம் அமைக்கப்பட்டது. இரண்டாம் கால வேள்வி பூஜையும், மாலையில் சுவாமிகளுக்கு எண் வகை மருந்து சாற்றும் நிகழ்ச்சியும், இரவு மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடந்தன. நேற்று காலை திருப்பள்ளி எழுச்சியை அடுத்து, நான்காம் கால வேள்வி பூஜைகள் நடந்தன. யாக சாலையில் இருந்து தீர்த்தக் குடங்களை, கோவில் வளாகத்தில் எடுத்து வந்து, முதலில் கோவிந்தராஜ பெருமாள் கோபுர கலசத்தின் மீதும், பின்பு சுவாமி மீதும் புனித நீர் ஊற்றி நன்னீராட்டு விழாவை நடத்தினர். அதைத் தொடர்ந்து கொங்காலம்மன் கோவில் கோபுர கலசத்திற்கும், பின்பு அம்மன் சுவாமி மீதும் புனித நீர் ஊற்றி, சிரவை ஆதீனம் கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள் நன்னீராட்டு விழாவை நடத்தி வைத்தார். மூலதுறை குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் வேள்வி வழிபாடுகளை செய்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.