‘ஏன் கோயிலுக்கு செல்கிறோம்’ என்று ஒருவர் உங்களிடம் கேள்வி கேட்டால் என்ன சொல்வீர்கள். மன நிம்மதி, நினைத்த விஷயம் கைகூட, சந்தோஷத்திற்காக என பல பதில்களை சொல்வோம். ‘இத்தனைக்காகவும் வேறு வேறு கோயிலுக்கு செல்ல வேண்டுமா’ என மீண்டும் கேட்டால், ‘ஆம்’ என செல்வோம். ஆனால் அப்போது சிலருக்கு மனதில் ஒரு கேள்வி எழலாம். இப்படி எத்தனை கோயில்களை தரிசித்தும் மனசு நிறையவில்லை. தேடல் நிறையவில்லை என சொல்பவர்களுக்காகவே ஒருவர் இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. முழுமுதற் கடவுள் விநாயகர். இவர் சக்தி கணபதி என்னும் பெயரில் சென்னை குரோம்பேட்டை லட்சுமிநகரில் அருள்புரிகிறார். உங்களால் இதை நம்பவே முடியாது என்றாலும் நம்பித்தான் ஆக வேண்டும். ஒருகாலத்தில் பசுமாட்டு தொழுவமாக இருந்த இடம் அது. பின் பக்தர் ஒருவரின் முயற்சியால் உருவான கோயில்தான் இது. முதலில் லட்சுமி கணபதியாக இருந்த இவர், பகவதி என்னும் சித்தரின் அறிவுரையின்படி சக்தி கணபதியாக மாறினார். பின் துர்கை சன்னதியும் உருவானது. நாளடைவில் நவக்கிரஹம், பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நான்கு சன்னதிகளாக வளர்ச்சி அடைந்தது. கிழக்கு நோக்கி இருக்கும் இவரை வழிபட்டால் நமது வாழ்க்கை பூஞ்சோலையாக மாறிவிடும். இவர் பார்ப்பதற்குத்தான் எளிமையானவர். ஆனால் மிகவும் வலிமையானவர். கோயிலின் உள்ளே எங்கு பார்த்தாலும் துாய்மை. அங்கு வீசும் காற்றும் துாய்மை. அருகில் உள்ள மரத்தில் உதிர்ந்து விழுந்த சருகுகள் கூட அங்கு பார்க்க முடியாது. இப்படி நம் பாதங்களை மெல்ல மெல்ல வைத்து பிரகாரத்தை சுற்றிவந்தால் துர்கையை காணலாம். இப்படி அவளை வணங்கி உத்தரவுவாங்கி வந்தவுடன் எதிரே பஞ்சமுக ஆஞ்சநேயர், நவகிரகங்கள் நமக்காக காத்திருப்பர். இப்படி அந்தக் கோயிலின் தெய்வீகம் அபூர்வமானது. ஒருமுறை சென்று வாருங்கள். உங்களின் மனம் இன்பக் கடலில் நீச்சலடிக்கும்.
எப்படி செல்வது: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து 19 கி.மீ.,