பதிவு செய்த நாள்
29
ஜூன்
2022
06:06
பல்லடம்: பல்லடம் அருகே, பொன் அறச்சாலை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பல்லடம் அடுத்த, புளியம்பட்டி கிராமத்தில் பொன் அறச்சாலை அம்மன் கோவில் கட்டப்பட்டு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூன் 26 அன்று கணபதி வேள்வி, 108 திரவிய ஆகுதி, மூத்த பிள்ளையார் வழிபாடு உள்ளிட்டவற்றுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து, மண் எடுத்து பூசித்தல், நிலபதி வேள்வி, திரவியங்களால் இடத்தைத் தூய்மை செய்தல், நவகிரகம், வாஸ்து, பைரவர், பிரம்மா, காளி வழிபாடுகள் நடந்தன. அன்று காலை மூலவர் பிரதிஷ்டை நடந்தது. மாலை, 6.00 மணிக்கு முதல் கால வேள்வி, மற்றும் திருவிளக்கு ஏற்றுதல், மலர் வழிபாடு, சுப்ரமணியர் வேள்வி ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம் காலை, 4.00 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும், இதையடுத்து, கலசங்கள் கோவிலை வலமாக எடுத்து வரப்பட்டு, கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. செஞ்சேரிமலை திருநாவுக்கரசர் மடாலயத்தின் மூலம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்க, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.