நாளை ராமேஸ்வரத்தில் பூஜாரிகளுக்கு வழிபாட்டு பயிற்சி முகாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2022 06:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் நாளை (ஜுன் 30) பூஜாரிகளுக்கு 52வது ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம் துவங்குகிறது.
தமிழக கிராம கோயில் பூசாரிகள் பேரவை சார்பில் 1990 முதல் தற்போது வரை கிராம கோயில்களில் பூஜை செய்யும் பூஜாரிகளின் திறனை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், எவ்வித கட்டணமும் இன்றி கோயிலில் வழிபாட்டு பயிற்சி முகாம் நடத்துகின்றனர். அதன்படி நாளை ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் 52வது பயிற்சி முகாம் துவங்குகிறது. இம்முகாமில் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான கிராம கோயில் பூஜாரிகள் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு கடவுளுக்கு உகந்த காயத்ரி மந்திரங்கள், தியான ஸ்லோகங்கள், அர்ச்சனை மந்திரங்கள், அபிஷேக முறைகள் குறித்து 15 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முகாம் துவக்க விழாவுக்கு கிராம கோயில் பூஜாரிகள் பேரவை அறங்காவலரும், தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் கோபால்ஜி தலைமை வகிக்கிறார். கிராம கோயில் பூஜாரிகள் பேரவை நிறுவனர், தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் நிறுவன தலைவர் எஸ்.வேதாந்தம் சிறப்புரை ஆற்றுகிறார். ஏற்பாடுகளை கிராம கோயில் பூஜாரிகள் பேரவை மாநில அமைப்பாளர் எஸ். சோமசுந்தரம், இணை பொதுச்செயலாளர் ராமசுப்பு செய்து வருகின்றனர்.