பதிவு செய்த நாள்
01
ஜூலை
2022
05:07
குளித்தலை அடுத்த, சின்னையம்பாளையம் பஞ்., 8 பட்டி கிராம பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட விநாயகர், குள்ளாயி அம்மன், காளியம்மன், கன்னிமார் அம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்தாண்டு திருவிழா நடத்த கிராம பொதுமக்கள் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து, 8 பட்டி கிராம முக்கியஸ்தர்கள், சின்னையம்பாளையத்தில் உள்ள குள்ளாயி அம்மன் கோவில் வளாகத்தில், பல்லியிடம் சகுணம் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, கிராம மக்கள் எதிர்பார்த்த, கோவில் வளாகத்தில் உள்ள நுழைவு வாயிலில் இருந்து, பல்லியின் குரல் எதிரொலித்தது. இதனால் திருவிழா நடத்துவதற்கு, பல்லி சகுணம் சொல்லிவிட்டது என, திருவிழா நடத்துவதற்கு முடிவு செய்தனர். இதையடுத்து, கடந்த வாரம் குளித்தலை காவிரியில் இருந்து புண்ணிய தீர்த்தம் எடுத்து வந்து கோவில்கள் மற்றும் 8 பட்டி கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தெளிக்கப்பட்டது. அன்று மாலை கோவில் கிணற்றில் இருந்து தாரை, தப்பட்டை முழங்க வாணவேடிக்கையுடன் கம்பம் அழைத்து வந்து, கோவில் முன்பாக நட்டனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு காப்பு கட்டி திருவிழா தொடங்கியது. அன்று முதல், 15 நாட்களுக்கு விரதம் இருந்து சுவாமிகளை வழிபட்டு வந்தனர். முதல் நாள் திருவிழா கடந்த, 26ல் தொடங்கியது. அன்று, குளித்தலை, காவிரியிலிருந்து தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து வந்து, சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. இரவு, ஓணாப்பாறையில் குள்ளாயிஅம்மனுக்கு கரகம் பாலித்தனர். 3ம் நாளான நேற்று முன்தினம், அனைத்து சுவாமிகளுக்கும் அபிேஷக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, பெண்கள் கொண்டு வந்த முளைப்பாரிகளுடன், கோவில் முன்பாக நட்டு வைத்திருந்த கம்பத்தை எடுத்து, கோவில் கிணற்றுக்கு மஞ்சள் நீராட்டுடன் அழைத்துச் சென்றனர். இதில், 8 பட்டி கிராம ஊர் முக்கியஸ்தர்கள், விழா குழு நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.