ரிஷிவந்தியம் : அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேர்திருவிழாவையொட்டி, கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீமுத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரம்மோற்சவ விழா எனப்படும் தேர்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும்.நடப்பாண்டிற்கான பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் காலை கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று மாலை 6:30 மணியளவில், கோவில் பலி பீடம் அருகே உள்ள கொடிகம்பத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பஞ்சமி திதியில் கோவில் குருக்கள் நாகராஜ், சோமு ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நந்தி வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் பஞ்ச மூர்த்தி சுவாமி வீதியுலா நடந்தது.வரும் 11ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 3.30 மணியளவில் தேர்திருவிழா நடைபெறுகிறது.