சாத்துார்: சாத்துார் வெங்கடாசலபதி கோவிலில் நேற்று ஆனித்திருவிழா கொடிேயேற்றத்துடன் துவங்கியது. சாத்தூரப்பன் என அழைக்கப்படும் சாத்தூர் வெங்கடாசலபதி கோவில் 500 ஆண்டுகள் பழமையானது. வருடம் தோறும் ஆனி மாதம் ஆனி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
ஆனி பிரம்மோற்சவ விழாவில் வெங்கடாஜலபதி சுவாமி திருத்தேரோட்டம் நடைபெறும். கடந்தஇரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இது கோவிலில் ஆனி பிரமோற்சவ விழா நடைபெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆனி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 11:30 மணிக்கு கோவில் பட்டர்கள் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்தனர். பின்னர் திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் சுவாமி பல்லக்கு,சேஷம், கருடன் வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனித்தேரோட்டம் வரும் ஜூலை 13 நடைபெறவுள்ளது. இந்து சமய அறநிலை துறை சார்பில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.