பதிவு செய்த நாள்
09
ஜூலை
2022
10:07
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவில், முத்துப் பல்லக்கு உற்சவம் நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா கடந்த மாதம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை பஞ்சமூர்த்தி வீதியுலா நடந்தது.முக்கிய விழாவான தேரோட்டம் 5ம் தேதியும், ஆனித் திருமஞ்சன தரிசன விழா 6ம் தேதியும் நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. சிதம்பரம் கீழ வீதியில் புஷ்பமுத்து பல்லக்கு சிறப்பு அலங்காரம் செய்து, அதில் சோமாஸ்கந்தர் முத்து விமானத்தில், சிவானந்த நாயகி, சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் புஷ்ப முத்து பல்லக்கில் இரவு 2 மணி அளவில், ஊர்வலமாக கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக வந்து காலை 4.30 மணி அளவில் நிலையை அடைந்தது.தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் நடராஜர் கோவிலில் உள்ள தேவ சபைக்கு சென்றனர். ஆனித் திருமஞ்சனம் நிறைவு பெற்றது.