பதிவு செய்த நாள்
10
ஜூலை
2022
09:07
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கையில், 13 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர்.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களும், விடுமுறை நாட்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களும், கோவிலுக்கு வந்து சுவாமியை வழிபட்டு செல்வர். பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் உண்டியல் காணிக்கை எண்ணியதில், 37 லட்சத்து, 67 ஆயிரத்து, 313 ரூபாய் இருந்தது.
இந்த மாதம் திருவிழா நடைபெற உள்ளதால், கோவில் நிர்வாகத்தினர் ஒரு மாதத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் கைலாச மூர்த்தி, ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் உதவி கமிஷனர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில், உண்டியல் எண்ணும் பணிகள் தொடங்கின. கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா முன்னிலை வகித்தார். கோவிலில், 20 இடங்களில் வைத்திருந்த உண்டியல்களில், 11 லட்சத்து, 84 ஆயிரத்து, 719 ரூபாயும், இரண்டு தட்டு காணிக்கை உண்டியலில், ஒரு லட்சத்து, 63 ஆயிரத்து, 765 ரூபாயும் இருந்தது. மொத்தமாக, 13 லட்சத்து, 45 ஆயிரத்து, 484 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தன. மேலும், 53 கிராம் தங்கம், 154 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியலில் இருந்தன. இப்பணிகளில், கண்காணிப்பாளர் மல்லிகா, ஆய்வாளர் தயாநிதி, அலுவலக பணியாளர்கள் மற்றும் பக்த குழுவினர் ஈடுபட்டனர்.