வீரவநல்லூர்: வீரவநல்லூர் திரவுபதி அம்மன் கோயிலில் பக்தி பெருக்குடன் பக்தர்கள் நேற்று பூக்குழி இறங்கிய நிகழ்ச்சியை திரளான மக்கள் கண்டுகளித்தனர். வீரவநல்லூர் திரவுபதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆடி மகோத்சவ பூக்குழி திருவிழா இந்த ஆண்டும் கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அபிஷேக, அலங்கார தீபாராதனையும், மகாபாரத உபன்யாசமும், இரவு சப்பரத்தில் வீதி உலாவும் நடந்தது. விழாவின் சிறப்பு நாளான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலையில் பால்குடம் வீதியுலாவும், மதியம் அபிஷேகமும், தொடர்ந்து பூ வளர்க்கும் இடத்தில் அக்னியை காவல்புரியும் தெய்வமான வீரபுத்திர சுவாமியை கன்னி மூலையிலும், ஈசான மூலையிலும் வைத்தனர். தொடர்ந்து கரகம் எடுப்பவர் கோயில் ஹோமகுண்டத்தில் உள்ள பூவை இரு கைகளாலும் அள்ளி துணியில் போட்டு சுற்றி, பிரகாரத்தை வலம் வந்து பூ வளர்க்கும் இடத்தில் கொட்ட "கோவிந்தா என்ற கோஷம் முழங்க பூ வளர்க்கப்பட்டது.தொடர்ந்து சங்கிலிபூதத்தாருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பூக்குழி இறங்கும் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் நீராடி மஞ்சள் ஆடை அணிந்து அக்னி குண்டத்தை வலம் வந்து முடிக்க "கோவிந்தா என்ற கோஷம் முழங்க குந்தம்மாதேவியும் கரகமும் முதலில் பூ இறங்க தொடர்ந்து பக்தர்களும் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர்.மெய்சிலிர்க்க வைத்த இந்த காட்சியை திரளான மக்கள் கண்டுகளித்தனர். வெளியூரில் இருந்தும் ஏராளமான மக்கள் பூக்குழி விழாவை காண வந்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் லட்சுமணன், வீரவநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் சோபாஜெம்சி செய்திருந்தனர். சுகாதார வசதிகளை டவுன் பஞ்., நிர்வாகம் செய்திருந்தது.இன்று (11ம் தேதி) தீர்த்தவாரியும், வரும் 15ம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் அக்தார் பாபநாசம் மற்றும் விழாக் கமிட்டியார் செய்திருந்தனர்.