பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா : அக்கினிசட்டி எடுத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2022 03:07
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா நிறைவு நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய அக்கினிசட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர்.
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா பத்து நாட்களாக நடந்தது. தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் கவுமாரியம்மன் கோயில் ஒன்றாகும்.
சகல ஐஸ்வர்யம் வழங்கும் அம்மனாக வராக நிதி கரையில் அமைந்துள்ளார். கொரோனாவால் இரு ஆண்டுகளாக திருவிழா நடக்காததால், இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து தேனி மாவட்டம் முதல் தென் மாவட்டம் வரை தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர். ஜூலை 5ல் சாட்டுதலுடன் கம்பம் நடப்பட்டது. ஜூலை 11ல் (ஆனி 27ல்) கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. பத்து நாட்கள் நடந்த திருவிழாவில் தினமும் அம்மன் சிம்மம், குதிரை, அன்னபட்சி, யானை, ரிஷபம், மின்னொளி, புஷ்ப பல்லாக்கு அலங்காரத்தில் மண்டகப்படி காரர்கள் ஏற்பாட்டில் பத்து நாட்களாக வீதி உலா வந்தார். ஆனியில் துவங்கிய திருவிழா இன்று ஜூலை 20 (ஆடி 4ல்) நிறைவு பெற்றது. நேற்று நள்ளிரவு 2:00 மணியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி, ஆயிரம் கண்பானையெடுத்து அம்மனை வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தென்கரை வர்த்தக சங்கம் தலைவர் சிதம்பரசூரியவேலு குடும்பத்தினர் திருக்கண் அபிஷேகம் நடத்தினர். ஜூலை 26 ல் மறுபூஜை நடக்கிறது. டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.