பதிவு செய்த நாள்
21
ஜூலை
2022
05:07
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் விழா, நேற்று முன்தினம் இரவு, பூச்சாட்டுடன் துவங்கியது.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, அம்மன் கோவில்களில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஒன்று. இங்கு வார நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களும், கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும், ஆடிக்குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். விழாவில் லட்சம் பக்தர்களுக்கு மேல் பங்கேற்பர்.
இந்த ஆண்டு ஆடிக்குண்டம் விழா நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுடன் துவங்கியது. பவானி ஆற்றின் கரையோரம் உள்ள, முத்தமிழ் விநாயகர் கோவிலில் இருந்து, அணி கூடையை தாங்கிய பூசாரி ரகுபதியை, அம்மன் கோவிலுக்கு அழைத்து வந்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்த பின்பு, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து நெல்லித்துறை கிராம மக்கள், ஆற்றின் கரையோரம் உள்ள விநாயகர் கோவில் அருகே இருந்தனர். விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்த பின்பு, மேல தாளத்துடன், ஊர் பொதுமக்களை கோவிலுக்கு அழைத்து வந்தனர். சிறப்பு பூஜை செய்த பின்பு, அம்மனுக்கு பூ சாட்டப்பட்டது. இவ்விழாவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா, உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, கோவில் பணியாளர்கள், நெல்லித்துறை கிராம மக்கள் ஆகியோர் பங்கேற்றனர். நாளை காலை, லட்சார்ச்சனையும், 24ம் தேதி கொடியேற்றமும், 25ம் தேதி பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், 26ம் தேதி அம்மன் அழைப்பு மற்றும் குண்டம் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. இதை அடுத்து, 27ம் தேதி மாவிளக்கு படைத்தல், அழகு குத்தி தேர் இழுத்தல், பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது. 28ம் தேதி ஆடி அமாவாசை விழாவும், குதிரை வாகனத்தில் அம்மன் பதிவேட்டை, திருவீதி உலாவும், 29ம் தேதி மகா அபிஷேகம், கொடி இறக்குதல், மஞ்சள் நீராட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.