பதிவு செய்த நாள்
21
ஜூலை
2022
05:07
மதுரை : கோயில் சொத்துக்களுக்குரிய குத்தகை வாடகை நிலுவையில் ரூ.197 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்தது.
மதுரை ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக கோயில்களின் ஸ்தல புராண வரலாறு, பூஜை நேரம், கட்டணம், பக்தர்கள் கோயிலில் நுழையும் மற்றும் வெளியேறும் நேரம், கோயில்களுக்குச் சொந்தமான நிலம், கடைகள், அசையாச் சொத்துக்கள், பணிபுரியும் ஊழியர்களின் விபரங்களை சிறப்பு இணையதளத்தில் வெளியிட வேண்டும்.நன்கொடை வசூல், தரிசன டிக்கெட், உண்டியல், குத்தகை கட்டணத்தை ஆன்லைன் அல்லது வங்கி மூலம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு ரமேஷ் குறிப்பிட்டார்.
2021 பிப்ரவரியில் நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.அறநிலையத்துறை கமிஷனர் பதில் மனு: அறநிலையத்துறை tnhrce.gov.in இணையதளத்தை பராமரிக்கிறது. இதில் கோயில்களின் பொதுவான தகவல்கள், சொத்துக்கள், கட்டண தரிசன பதிவு, மூலவர், ஆகமம், வரலாறு, பூஜைகள், தரிசன நேரம், பூஜை கட்டணம், வருவாய் ஆதாரம், கண்காணிப்புக் கேமரா, பாதுகாப்பு அம்சம் உட்பட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.கோயில்களின் சொத்துக்களை அடையாளம் கண்டு, பாதுகாக்க அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு 9 ஆயிரத்து 793 கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள், 1 லட்சத்து 66 ஆயிரத்து 633.30 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.10 ஆண்டுகளில் 3172.62 ஏக்கர் நிலம், 607 மைதானம், 1698 சதுர அடி மனையிடம் மற்றும் 293 மைதானம், 937 சதுர அடி கட்டடங்கள் மீட்கப்பட்டு, கோயில் சொத்துக்களுடன் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள்: அறநிலையத்துறையின் நடவடிக்கையில் இந்நீதிமன்றம் திருப்தி கொள்கிறது. கோயில்களின் அசையாச் சொத்து பரப்பளவு, யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன, வருவாய், அது தொடர்பான வழக்கு விபரங்களை மக்கள் அறியும் வகையில் அறநிலையத்துறை 8 மாதங்களில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றனர்.நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ேஹமலதா அமர்வு நேற்று விசாரித்தது.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது குறித்து அறநிலையத்துறை கமிஷனர் தாக்கல் செய்த அறிக்கை:அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள மத நிறுவனங்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலம், 22 ஆயிரத்து 600 கட்டடங்கள், 33 ஆயிரத்து 665 காலி இடம் உள்ளன. 10 ஆயிரத்து 426.79 ஏக்கர் நிலத்தில் 19 ஆயிரத்து 954 ஆக்கிரமிப்புகள் உள்ளன. இது தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.3.48 லட்சம் ஏக்கர் தொடர்பான ஆவணங்கள் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. புதிதாக 67 ஆயிரத்து 588.28 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.குத்தகை வாடகை நிலுவையை பசலி ஆண்டில் ரூ.550 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஜூன் 15 வரை ரூ.197 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கு கம்ப்யூட்டர் ரசீது வழங்கப்படுகிறது.கோயில்களின் ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்கும் பணி துவங்கியுள்ளது. இதுவரை 10 ஆயிரத்து 944 கோயில்களின் ஆவணங்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு குறிப்பிட்டார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்தனர்.