பதிவு செய்த நாள்
22
ஜூலை
2022
05:07
நயினார்கோவில்: பரமக்குடி அருகே உள்ள திருமருதூர் எனும் நயினார்கோவிலில் அருள் பாலிக்கும் சவுந்தர்ய நாயகி சமேத நாகநாத சுவாமி கோயிலில், ஆடிப்பூர திருக்கல்யாண திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
கடந்த ஆண்டுகளில் கொரோனாவால் விழா தடைப்பட்ட நிலையில், இன்று மாலை 6:00 மணிக்கு அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தியுடன் விழா தொடங்குகிறது. நாளை(ஜூலை 23) காலை 7:00 மணி முதல் 7:45 மணிக்குள் சிங்க கொடி ஏற்றப்பட்டு, இரவு இந்திர விமானத்தில் அம்பாள் அருள் பாலிக்கிறார். தொடர்ந்து தினமும் காலை, மாலை அம்பாள் வெள்ளி பல்லாக்கில் பல்லாங்குழி ஆடிவரும் திருக்கோலம், ராஜயோக அலங்காரம், அம்மானை ஆடி வருதல், வேணுகான கிருஷ்ணன், கோலாட்டம், சரஸ்வதி, சிவலிங்க பூஜை என அருள்பாளிக்கிறார். மேலும் வெள்ளி அன்ன, சிம்ம, கமல, ரிஷப, கிளி, குதிரை வாகனங்களிலும் வீதிவலம் வருகிறார். ஜூலை 31 காலை 8:00 மணிக்கு அம்பாள் தேரோட்டம், ஆகஸ்ட் 2 ல் தபசு மண்டபம் எழுந்தருளுவார். ஆகஸ்ட் 3 நாகநாதர் சுவாமி, சவுந்தர்ய நாயகி அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. ஆகஸ்ட் 8 அன்று உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான சேதுபதி ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன், நயினார்கோவில் சரக பொறுப்பாளர் வைரவ சுப்ரமணியன் செய்து வருகின்றனர்.