பதிவு செய்த நாள்
24
ஜூலை
2022
06:07
பல்லடம்: உலகேஸ்வர சுவாமி கோவிலில், அம்மன் சன்னதி கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று பாலக்கால் பூஜை நடக்க உள்ளது. பல்லடம் அடுத்த, கரைப்புதூர் கிராமம் அல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி, மற்றும் கரிய காளியம்மன் கோவில்கள் உள்ளன. 27 ஆண்டுகளுக்குப் பின் இக்கோவில்கள் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, உலகேஸ்வர சுவாமி கோவிலில் மூலவரின் இடப்புறம் உள்ள உண்ணாமலை அம்மன் சிலையை, பழைய முறைப்படி வலப்புறம் மாற்றி அமைக்க வேண்டும் என நிர்வாகிகள் சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
உண்ணாமலை அம்மன் சன்னதி பழைய முறைப்படி இருந்ததற்கான போதிய சான்றுகள் இல்லாததால், ஆவணங்களை சேகரிக்கும் முயற்சியில் தொல்லியல் துறை, மற்றும் கோவில் ஸ்தபதி உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இதற்காக, பழைய கோவில் இருந்த இடத்தில் பூமி தோண்டப்பட்டது. அங்கு, கோவில் இருந்ததற்கான கருங்கற்கள், செங்கல் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, அம்மன் சன்னதியை மாற்றி அமைப்பதற்கான ஒப்புதல் பெற வேண்டி, கோவில் கமிட்டி, மற்றும் அர்ச்சகர் ஆகியோரிடம் விண்ணப்பம் பெறப்பட்டது. இதற்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில், இன்று காலை, 11.00 மணிக்கு, பாலக்கால் பூஜை நடக்கவுள்ளதாக, கோவில் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.