Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கனவெல்லாம் பலிக்கும்! கண் முன்னே ... மருத்துவத்தை மிஞ்சிய மகான்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அன்றாட வாழ்வில் ஆத்திச்சூடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2022
04:07


ஐயம் இட்டு உண்

கொடுப்பது என்பது தெய்வகுணம். பிறருக்கு இயன்ற வரை கொடுத்துப் பழக வேண்டும். கொடுக்கமாட்டேன் என்பது மிகவும் இழிந்த குணம் என்று தமிழ் கூறுகின்றது. ஈயேன் என்றார் அதனினும் இழித்தன்று என்பது புறநானுாற்றின் கூற்று. எனவே கொடுக்க வேண்டும். “நொய்யிற் பிளவளவேணும் பகிர்மின்கள்’’ என்பார் அருணகிரிநாதர். அதற்கு மனம் வேண்டும். பேருந்துகளில் பார்த்து இருக்கின்றோம். கணவனும் மனைவியும் தனது குழந்தையுடன் மூன்று சீட்டில் உட்கார்ந்து இருக்கும்போது மகனைப் பார்த்து சொல்லுவார்கள். காலை அகட்டி (விரித்து) உட்காருடா... வேறு யாரும் வந்துவிடப் போகிறார்கள் என்று. அத்தகைய விரிந்த(?) மனம் பெற்றோருக்கு இருந்தால் பிள்ளைகளுக்கு எப்படி விரிந்த மனம் வளரும். சில மணிப்பொழுது பயணத்திலேயே பிறருக்கு இடம் கொடுக்க மறுத்தால் சொந்தப் பொருள் எதையாவது கொடுப்பார்களா என்ன?
    எனவே தான் அவ்வை ஐயம் இட்டு உண் என்றாள். ஐயம் என்றால் பிச்சை இல்லை. ஆண்டாள் நாச்சியார் அருளுவார் ஐயமும், பிச்சையும் ஆம் தனையும் கைகாட்டி என்று. நமக்கு மேலாக இருப்பவர்களுக்குச் செய்வது தானம். வசதியில்லாத ஏழைகளுக்குச் செய்வது தர்மம். தானம் என்பது தேடிச் சென்று கொடுப்பது. தர்மம் என்பது தேடி வருபவர்களுக்குச் கொடுப்பது. கொடுப்பதையும் முழுமையாக, மகிழ்ச்சியாகக் கொடுப்பது. நாம் கொடுத்த பிறகு அவர் வேறு யாரிடம் சென்று வாங்க வேண்டாத அளவிற்குக் கொடுப்பதே உயர் குலத்தில் பிறந்தவரது பண்பாகும் என்கிறார் திருவள்ளுவர்.
    ஆம் தனையும் என்றால் போதும் போதும் என்று சொல்லும் வரையிலும் என்பார்கள் பெரியோர்கள். எனவே கொடுத்துப் பழக வேண்டும். வீட்டில் மீதம் இருப்பதைக் கொடுப்பது அல்ல. நாம் சாப்பிட்ட மிச்சத்தைக் கொடுப்பதல்ல. நாம் சாப்பிடும் முன்பாகக் கொடுத்துவிட்டுப் பிறகு சாப்பிடுவது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்... என்பது வள்ளுவம். மனிதனுக்கு மட்டுமல்ல. எல்லா உயிர்களுக்கும் தான். செடிக்குத் தண்ணீர் பாய்ச்சுவது கூட உணவு கொடுப்பது தான். கோடைக் காலங்களில் வீட்டில் போர்டிகோவின் மேலே பழைய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி வைப்பது கூடப் பல்லுயிர் ஓம்புவது தான். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது, தாவித் தாவி எட்டிப்பிடிக்கும் ஆட்டிற்குக் கொஞ்சம் இலைகளைப் பறித்துப் போடுவதும் தர்மம் தான். “யாவர்க்குமாம் பசுவிற்கு ஓர் வாயுறை” என்றார் திருமூலர். இங்கே பசு என்பது எல்லா விலங்குகளையும் குறிக்கும். அதற்காக அமாவாசை ஒரே நாளில் கட்டுக்கட்டாக, கட்டாயமாக பசுவிடம் அகத்திக்கீரையைக் கொண்டு போய் தொந்தரவு செய்வது என்பது கூடாது. அமாவாசை வரை காத்திருக்க வேண்டாமே! இயன்ற நாட்களில் எப்போது வேண்டுமானாலும் செய்யலாமே!
    காஞ்சி மஹாபெரியவரிடம் ஒருவர் வந்து லட்சம் பேருக்கு அன்னதானம் செய்திருக்கின்றேன் என்று இறுமாப்புடன் கூறினார். உடனே அவரின் தலைக்கனத்தைக் கருணையுடன் குறைக்க எண்ணியவர் மடத்தில் இருந்த ஒரு பாட்டியைக் காட்டி இவர் பல லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தவர் என்றார். பணக்காரரும், மற்வர்களும் திகைத்துக் கொண்டிருக்க இந்தப் பாட்டி மூடைக்கணக்கில் எறும்புப் புற்றில் குருணை அரிசி போட்டவர் என்றார். அன்னதானம் என்றால் மனிதர்களுக்கு மட்டும் தான் என்று மனதை ஏன் குறுக்கிக் கொள்ள வேண்டும்? என்றார். பக்தர்கள் அன்னதானம் குறித்த புதிய விளக்கத்தைப் பெற்றார்கள்.
    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்பார் திருவள்ளுவர். தன்னிடம் இருப்பதைப் பிரித்து எல்லா உயிர்களும் வாழ உதவுவது என்பதே தெளிவு ஆகும். நம்மிடம் உள்ளதை மகிழ்வோடு பகுத்து, அதாவது பிரித்துக் கொடுக்க வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓரிரண்டு நபர்களுக்குக் கூடுதலாகவே சமைத்து வைக்கும் வழக்கம் இருந்தது. இரவு நேரங்களில் மீதமான சாதத்தில் தண்ணீர் ஊற்றாமல் காத்திருப்பார்கள். கடைசி பஸ் வந்து விட்டாதா எனக் கேட்டு, பிறகு சாப்பாட்டு வேலைகளை முடிப்பார்கள். ஏனெனில் அதில் கூட யாரும் வரலாம். அவர்களுக்கு உணவு வேண்டும் என்பது நம்மிடம் ஊறிப் போயிருந்த பழக்கம். ஆனால் இன்றோ ஊரெங்கும் ஓட்டல்களும், தள்ளுவண்டிக் கடைகளும் தான் இரவுவேளை உணவையே வழங்கிக் கொண்டிருக்கின்றன.
    பழங்காலத்தில் அதிசயிக்கத்தக்க ஒரு பழக்கம் இருந்தது ஆம். ஒவ்வொரு கிராமத்திலும் ஊரின் எல்லையில் இருக்கும் மரத்தில் ஒரு உணவு மூட்டையைக் கட்டி வைப்பார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒருநாள் என்னும் நடைமுறை உண்டு. அது யாருக்கு என்றால் திருட வருகிற திருடனுக்கு. எங்கள் ஊரில் திருட வருகிற திருடன் கூட உணவு இல்லாமல் பட்டினி கிடக்கக் கூடாது என்னும் உயர்ந்த எண்ணம், எத்தகைய வியப்பை நமக்குத் தருகின்றது.
    முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு எங்கள் ஸ்ரீகார்யம் அவர்களின் தாயார் திருமதி. சரஸ்வதி அம்மாள் அவர்கள் இரவு எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் உணவு வகைகளையயல்லாம் காரில் எடுத்துக் கொண்டு போய் உணவின்றித் தவிக்கும் சாலையோர ஏழைகளுக்கு வழங்கிவிட்டு வருவார்களாம். அவர்களிடம் ஏம்மா! வீட்ல ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு பயன்படுத்தலாமே என யாராவது கேட்டால் அதற்கு அவர்கள் புன்னகையுடன் ஏழைகளின் வயிறு தாண்டா உண்மையான பிரிஜ் என்பார்களாம். எத்தகைய தாயுள்ளம் அது. செல்வத்தை சேமிக்கும் இடமே ஏழைகளின் வயிறு தான் என்பது வள்ளுவம். எனவே கொடுத்தல் என்பது நம் சமுதாயத்தில் நம்முடன் ஒட்டிப் பிறந்த பழக்கமாகும்.
    சென்ற நுாற்றாண்டில் நம் வீடுகளில் வாசலில் திண்ணை இல்லாமல் இருக்காது. பெரும்பான்மையோர் நடந்தே சென்ற காலம் அது. யார் வேண்டுமானாலும் திண்ணையில் துண்டை விரித்துப் படுத்துக் கொள்வார்கள். வீட்டிற்கு உரியவர்கள் தாங்கள் சாப்பிடும் முன்பு வாசலில் வந்த யாரேனும் பசியுடன் இருக்கின்றீர்களா? எனக் கேட்டு உணவளித்துப் பிறகு அவர்கள் சாப்பிடும் வழக்கம் இருந்திருக்கிறது. அதனையே இன்றும் நினைவுபடுத்தும் வகையில் கேரளாவில் வைக்கம் என்ற தலத்தில் சிவனுக்கு பூஜை செய்யும் முன்பாக அந்த கோயிலின் நான்கு வாயில்களிலும் விளக்குடன் ஒருவர் வந்து நின்று யாராவது பசியுடன் இருக்கிறீர்களா? எனக் கேட்ட பின்னரே இன்றும் பூஜை செய்கிறார்கள்.
    தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற மகாகவி பாரதியின் சீற்றமும் கூட பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதன் வெளிப்பாடே. பசிப்பிணி என்பது மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் தீர்க்க முடியாத ஒரு பிணி ஆகும். அவர் ஏழையோ, பணக்காரனோ, படித்தவனோ, படிக்காதவனோ, இல்லறத்தானோ, துறவியோ யாராக இருந்தாலும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை வயிற்றுக்கு உணவு அளித்தோ ஆக வேண்டிய சூழல். எனவே தன் வள்ளல் பெருமான் சன்மார்க்க சங்கத்தினை நிறுவி அணையா அடுப்பாக இன்றும் பசிப்பிணி போக்கும் பெரும் பணியை பெரும்பாலான ஊர்களில் விதித்திருக்கின்றார்.
    இன்றும் பெரும்பாலான ஊர்களில் ஏழை, எளிய மக்களுக்கு இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து உணவு தயார் செய்து வழங்கும் காட்சியைக் காண்கிறோம். எங்கள் ஊரில் நண்பர்கள் ஒன்றிணைந்து அன்னையாய் ஆவோம் என்றும் பெயரில் பேருந்து நிலையத்தை ஒட்டி சிறிய குடிலில் பிரிட்ஜ் ஒன்றை நிறுவி தினசரி உணவு வழங்குகிறோம். பிறந்த  நாள், திருமண நாள், முன்னோர் நினைவு நாள் எனப் பலரும் அதன் மூலம் உணவு வழங்குகின்றார். யார் வேண்டுமானாலும் உணவு வைக்கலாம். பசியுடன் இருக்கும் யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இருப்போர் கொடுக்க.... இல்லாதோர் எடுக்க... என்பதே அதன் தர்மச் சொல்லாகும். இதே போல பல ஊர்களில் பல பெயர்களில் நடைபெறுகிறது. சென்னை கிழக்குத் தாம்பரம் பூங்காவில் “பகிர்ந்து உண்” என்னும் பெயரில் இயங்கி வருகிறது. சாப்பாடு போட்டுட்டு சாப்பிடச் சொல்றீங்களே... இதெல்லாம் இரண்டு பேர் வேலைக்குப் போகும் இந்தக் காலத்தில் சாத்தியமா? எனக் கேட்பவர்களுக்கு இது போன்ற அமைப்பு ஒரு தீர்வாக இருக்கும்.
    வாரியார் சுவாமிகள் ஒரு கதை சொல்வார்கள். ஒரு ஊரில் ஒரு கிழவி இருந்தாள். அவள் யாருக்கும் ஒன்றும் தரமாட்டாள். யாரிடமும் அன்பாகக் பேசமாட்டாள். எரிந்து விழுவாள். இவள் கொடுக்காதது போக, ரோட்டில் போகும் போது, வரும் போது, பக்கத்து வீடுகளில், கடைகளில் உள்ளதை எல்லாம் திருடி வந்துவிடுவாள். இவளைக்கண்டாலே அனைவருக்கும் ஒரு பயம், வெறுப்பு. பிச்சைக்காரர்கள் கூட அவள் இருக்கும் தெருவிற்கு வரமாட்டார்கள்.
    ஒருநாள் வெளியூரில் இருந்து வந்த பிச்சைக்காரன் ஒருவன் தெரியாமல் அவள் வீட்டிற்குச் சென்றுவிட்டான். அவள் அப்போது நெல்லைக் குத்திக் கொண்டிருந்தாள். இவனைப் பார்த்ததும் என் வீட்டிற்கா வந்தாய்? எனக் கேட்டு நெல் குத்திய உலக்கையுடன் அடிக்கப் போய்விட்டாள். அவன் பயந்து ஊரை விட்டே ஓடிவிட்டான்.
    கிழவிக்கு வயதானது. ஒருநாள் இறந்தும் போனாள். எமன் சன்னதியில் நிறுத்தப்பட்டாள். சித்ரகுப்தன் இவள் வாழ்வியல் ஏட்டைப்  புரட்டினான் ஒரு நல்ல செயல் கூட இல்லை. துர்குணம், திருட்டு, கருமித்தனம் என கெடுதல்கள் ஏராளம். எனவே நரக தண்டனை என அறிவித்தான்.
    கிழவி ஓடிப்போய் எமனின் கால்களைப் பற்றிக் கொண்டு கதறினாள். எமதர்மனும் சித்ரகுப்தனிடம் ஏதேனும் நன்மை ஒரு சிறிதேனும் உள்ளதா எனப் பார்க்ச் சொன்னான். சித்ரகுப்தனும் ஆராய்ந்து, ‘‘பிரபோ... ஒருமுறை பிச்சை கேட்க வந்தவனை உலக்கையால் அடிக்க ஒங்கிய போது அதிலிருந்த அரிசித்துகள் அவனின் பிச்சைப் பாத்திரத்தில் விழுந்துவிட்டது. எனவே அதனைக் கணக்கில் எடுத்தால் இவள் சொர்க்கம் சொல்லலாம் என்றான்.
    தெரியாமல் விழுந்த ஒரு அரிசிக்கே சொர்க்க தரிசனமா... என்றாள். தெரிந்து, உணர்ந்து செய்யும் அன்னதானப் பலனை யாரேனும் சொல்ல இயலுமா? என எண்ணி மன்னிப்புக் கோரினாள் என்பார்.
    ஆம், நாமும் உண்ணும் போது பிற உயிர்களுக்கு உணவளித்து விட்டு உண்போம் என உறுதி ஏற்போம். அதுவே அவ்வை வாக்கை படித்ததற்கான பலனாகும். பகுத்து உண்போம். பசிப்பிணி போக்குவோம்.       

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar