காஞ்சி மஹாபெரியவரின் பக்தரான பஞ்சாபகேசன் என்பவர் குன்னுாரில் இருந்த தேயிலைத் தோட்டம் ஒன்றில் மேலாளராக இருந்தார். அவரது மனைவி பிரசவத்திற்காக சென்னையிலுள்ள தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார். குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்குள் மனைவிக்கு அம்மை ஏற்பட்டு கைகால் இழுக்க ஆரம்பித்தது. சென்னை தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் பரிசோதித்த போது ‘என்கபிலடிஸ்’ என்னும் வைரசால் பாதிப்பு இருப்பது தெரிந்தது. பஞ்சாபகேசனுக்கு தகவல் அனுப்ப அவர் சென்னைக்கு விரைந்தார். மனைவியின் நிலை பற்றி அறிய மருத்துவ அதிகாரியான தன் சித்தப்பாவை அணுகினார். ‘‘இந்த வைரசால் பாதிக்கப்பட்டால் பிழைப்பது கடினம். பிழைத்தாலும் பேசவோ, நடமாடவோ முடியாது. நினைவாற்றல் குறையும். உனக்கு காஞ்சி மஹாபெரியவர் மீது பக்தி உண்டே...அவரை வேண்டிக் கொள்’’ என்றார். பஞ்சாபகேசன் தன் மைத்துனருடன் காஞ்சி மடத்திற்கு புறப்பட்டார். மஹாபெரியவரிடம் மனைவியின் உடல்நிலையைச் சொல்லி வருந்தினார். சற்று மவுனமாக இருந்த சுவாமிகள், ‘‘விரைவில் சரியாகும்; பிரசாதம் வாங்கிக் கொள்’’ என்று சொல்லி திருநீறு கொடுத்தார். மருத்துவமனைக்கு திரும்பிய பஞ்சாபகேசன் திருநீறை மனைவியின் நெற்றியில் பூச இரண்டே வாரத்தில் குணம் பெற்றார். இன்னொரு சம்பவமும் இதே போல நடந்தது. கல்லுாரி படிப்பை முடித்த தன் மகளுக்கு திருமணத்தை நடத்த விரும்பினார் பஞ்சாபகேசன். காஞ்சி மடத்திற்கு செல்லும் போதெல்லாம் நல்ல இடத்து சம்பந்தம் அமைய வேண்டும் என மஹாபெரியவரிடம் வேண்டிக் கொள்வார். அதன்படியே வேதபண்டிதரான தேவங்குடி சிவராமகிருஷ்ண சாஸ்திரியின் பேரன் மாப்பிள்ளையாக அமைந்தார். இதற்கு சுவாமிகளின் ஆசியே காரணம் என சொல்லி மகிழ்ந்தார். பஞ்சாபகேசனின் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் திருப்பந்துறை என்னும் ஊரில் ஒருமுறை மஹாபெரியவர் முகாமிட்டிருந்தார். ஒருநாள் காலையில் ஆற்றங்கரைக்குச் செல்லும் வழியில் சேரியைச் சேர்ந்த மக்கள் சுவாமிகளை தரிசிக்க விரும்பினர். இதையறிந்ததும் உயரமான ஓரிடத்தில் ஏறி நின்று ஆசியளித்தார். அப்போது சிலர் தங்களின் பண்ணையிலுள்ள பசுக்கள் அடிக்கடி இறப்பதாக வருத்தப்பட்டனர். அவர்களுக்கு ஆசியளித்த மஹாபெரியவர் பிரசாதமாக திருநீறு வழங்க பிரச்னை தீர்ந்தது.