பதிவு செய்த நாள்
27
ஜூலை
2022
11:07
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், ஆடி கிருத்திகை விழா மற்றும் மூன்று நாள் நடந்த தெப்ப திருவிழாவில் குவிந்த 9 லட்சம் கிலோ பூ மாலை மற்றும் குப்பையை, நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தரம் பிரித்து அனுப்ப திட்டமிட்டு உள்ளனர். குப்பை கழிவில் இருந்து மின்சாரம், இயற்கை உரம் தயாரிக்கும் பணியில் நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் நடப்பாண்டிற்கான ஆடி கிருத்திகை விழா, இம்மாதம் 21ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை நடந்தது. இவ்விழாவில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் வந்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.தவிர இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சாதாரணமாக வந்து மலைக்கோவிலில், பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நேர்த்தி கடன்: இதில், 23 - 25ம் தேதி வரை மூன்று நாள் தெப்பத் திருவிழா நடந்தது. தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் காவடிகளுடன், மலைக்கோவிலுக்கு வந்து பல மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.இரவு சரவணபொய்கையில் நடந்த தெப்பத் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தின் படிகளில் அமர்ந்து, உற்சவர் முருகப் பெருமானை தரிசித்தனர். ஆடி கிருத்திகைக்கு வந்த பக்தர்கள் அனைவரும் மலர், மயில் காவடி ஆகியவற்றை தான் அதிகளவில் சுமந்து வந்தனர். மேலும், மலையடி வாரத்தில் உள்ள சரவணபொய்கை, நல்லாங்குளம் ஆகிய இடங்களில் காவடிகளுடன் வந்த பக்தர்கள், குளத்தில் புனித நீராடி, வீடுகளில் கொண்டு வந்த மலர் மாலைகளை கழற்றி, புதிய மலர் மாலைகளுடன் காவடிகளுக்கு பூஜை போட்டு, மலைக்கோவிலுக்கு சென்றனர்.காவடி மண்டபத்தில் நேர்த்தி கடனை செலுத்திய பின், காவடிகளில் இருந்த மலர் மாலைகளை, பக்தர்கள் கழற்றி வீசினர்.
அன்னதானம்: இந்த பூ மாலைகளை, கோவில் சார்பில் நியமிக்கப்பட்ட பத்மாவதி ஒப்பந்த ஊழியர்கள் 300 பேரும், திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி நகராட்சி ஊழியர்கள், ஆவடி மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள் 300 பேரும் என மொத்தம், 600 பேர் சேர்ந்து சேகரித்து அகற்றினர்.ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா ஆகிய ஐந்து நாட்கள் மட்டும், 9 லட்சம் கிலோ பூ மாலை மற்றும் குப்பை அகற்றப்பட்டு, பிளீச்சிங் பவுடர் துாவி சுகாதாரம் பாதுகாத்தனர். அதேபோல், ஆடிப் பரணி மற்றும் ஆடி கிருத்திகை ஆகிய நாட்களில் மட்டும், 300க்கும் மேற்பட்ட இடங்களில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.அந்த வகையில் சேர்ந்த வாழை இலை, தட்டுகள் என, 50 ஆயிரம் கிலோ குப்பையையும் நகராட்சி, கோவில் ஊழியர்கள் அதிரடியாக அகற்றினர்.
கூடுதல் வருவாய் : தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து பேருந்துகள் மூலம் வந்திருந்த பக்தர்களை, 3 கி.மீ., துாரத்தில் இறக்கிவிட்டனர். இதனால், வயதான பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். கோவில் சார்பில் வினியோகம் செய்த கார் பாஸ் பெற்றவர்கள் மட்டும் மலைக்கோவில் வரை அனுமதிக்கப்பட்டிருந்தனர். சென்னை, திருப்பதி ஆகிய மார்கத்தில் இயக்கப்பட்ட சிறப்பு மின்சார ரயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால், போக்குவரத்து துறையைவிட ரயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் வசூலானது.
பிளாஸ்டிக் கழிவுகளுக்கு சபாஷ்: திருத்தணி முருகன் கோவிலில் நடந்த ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழாவில், 6.50 லட்சம் கிலோ பூ மாலை மற்றும் காவடி கூடைகள் சேகரிக்கப்பட்டன. தவிர, 2 லட்சம் கிலோ வாழை இலை, பாக்கு மட்டை, பேப்பர் டம்ளர் போன்ற குப்பை; 50 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் கவர், டம்ளர் மற்றும் வாட்டர் கேன் போன்ற கழிவுகள் என, மொத்தம், 9 லட்சம் கிலோ குப்பையை, நகராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், உடனுக்குடன் அகற்றினர்.மக்கும் குப்பையான பூ மாலை, வாழை இலை ஆகியவை தனியாக பிரித்து, நகராட்சியில் உள்ள உரக் கிடங்கிற்கு அனுப்ப முடிவு செய்து உள்ளனர்.காய்கறி கழிவுகளை, மின்சாரம் தயாரிக்கும் பிரிவுக்கு அனுப்ப உள்ளனர். மறுசுழற்சி செய்யும் பிளாஸ்டிக் கழிவுகளை, துாய்மை பணியாளர்கள் எடுத்து சென்று, பிளாஸ்டிக் பொருட்கள் தயார் செய்யும் கம்பெனிகளுக்கு விற்க அறிவுறுத்தப்பட்டது. ஒரு முறை பயன்படுத்திவிட்டு துாக்கி எறியப்படும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கவர்கள் தனியாக பிரித்து, சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்ப உள்ளனர்.கடந்த 2019ம் ஆண்டு ஆடி கிருத்திகையின் போது, மொத்தம், 10 லட்சம் கிலோ பூ மாலை, வாழை இலை போன்ற குப்பை சேகரிக்கப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும், ஒரு லட்சம் கிலோ இருந்தது. தற்போது ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆடி கிருத்திகை விழாவில், குறைந்த அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் வந்துள்ளன.