எம்பெருமானுக்கு வாகனமாக இருக்கும் பட்சி ராஜனாகிய கருடனைப் பற்றி வேதாந்த தேசிகர் அருளியது இந்த ஸ்தோத்திரம்.
கருட பகவானே! வேதம் படித்த பெரியோர்கள் உம்மை இடைவிடாமல் துதிக்கின்றனர். உம்முடைய சிறகுகளில் இருந்து மிகவும் வலிமையாக காற்று வீசுகிறது. அந்தக் காற்றினால் கடல்கள் கரையை மீறிப் பொங்குகின்றன. அப்போது எழும்பும் அலைகள் பாதாள லோகம் வரையில் பாய்கின்றன. அந்தப் பாய்ச்சல் காற்றோடு கலந்த மிகவும் விசையோடு பாம் என்ற பேரொலியை எழுப்புகின்றன. அந்த சத்தத்தைக் கேட்டதும் பூமியைத் தாங்கும் திக்கஜங்கள் தங்களுடன் யாரோ போருக்கு வருவதாக நினைத்து கோபத்தோடு எதிர்த்து வருகின்றன. அந்த நேரத்தில் உம்முடைய நாகங்கள் என்ற ஆயுதத்தைக் கொண்டு திக்கஜங்களை அடக்கி விடுகிறீர்.
கருட பகவானே உம்முடைய கூர்மையான வளைந்த அலகு எதிரிகளுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. நீர் உமது புருவங்களை நெறிக்கும்போது பாம்பு நெளிவதைப் போல அச்சமேற்படுகிறது. உம்முடைய கோரைப்பற்களைக் காணும் எதிர்கள் இவை தேவேந்திரனின் வஜ்ராயுதமோ என்று கதி கலங்கிப் பின் வாங்குகிறார்கள். இத்தகைய பெருமைகள் கொண்ட உம்மை அடியேன் போற்றுகிறேன். வேதாந்த வித்தைகள் அடியேனுக்கு வசமாகும்படியாக அருள் செய்ய வேண்டும். மேலும் எப்போதும் உமக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியத்தையும் தவறாமல் அடியேனுக்கு தந்தருள வேண்டும் என்கிறார் தேசிகர்.
இந்த கருட தண்டகத்தை பாராயணம் செய்து வந்தால் எதிரிகள் தொல்லை ஒழிந்து போகும். நோய் நொடிகள் அண்டாது. விஷ ஐந்துக்களால் எந்த விதமான துன்பமும் ஏற்படாது என்று பெரியோர் கூறுவர்.