Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லா நாளுமே.. நல்ல நாளுதான்! துறவால் கிடைத்த மறுபிறப்பு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அவ்வியம் பேசேல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2022
10:08

சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் பகவத்கீதை முன்னுரையைத் தொடங்கும் போது “உலகின் அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் ஒப்பீடு செய்வது தான்” என்பார். ஆம் மனிதனின் நிம்மதியைக் கெடுப்பது ஒப்பீடு மட்டுமே. அடுத்தவரைப் பார்த்து பணம், புகழ், பதவி, அழகு, இளமை, நோய் என எதைப் பார்த்தாலும் மனம் பொறாமைப்படத் தொடங்கிவிடுகிறது.
    காலையில் வாக்கிங் போகும் போது சந்திக்கும் நண்பர்களிடம் வியந்து போய்க் கேட்கும் கேள்வி?  என்ன உனக்கு சுகர் இல்லையா? என்பது தான் அடிமனம் அவருக்கும் சுகர் இருந்தால் ஒரு திருப்திபட்டுக் கொள்ளும். அவ்வளவு ஏன்? இரவு நேரங்களில் கரண்ட் கட் ஆனவுடன் நாம் கேட்கும் முதல் கேள்வியே? அடுத்த வீட்டைப் போய்ப்பாரு? என்பது தான். அங்கும் கரண்ட் இல்லையயன்றால் கரண்டே இல்லை என்பதையும் மறந்து மனம் ஒரு மகிழ்வு கொள்ளும். இது தான் பொறாமையா? எனக் கேட்டால் இது பொறாமையின் சின்ன மின்னல்.
    பார்வையிலேயே பொறாமையை வெளிப்படுத்துவோரும் உண்டு. இதனையே கண் திருஷ்டி என்கின்றோம்.  மனத்திலுள்ள பொறாமையை வெளிக்காட்ட ஒரு பார்வை, ஏக்கப் பெருமூச்சு போதும். வீடு கிரஹப்பிரவேசம் ஒரு வாரம் முன்பு நண்பரை அழைத்து வந்து காட்டினான் ஒருவன். இத்தனை பெரிய வீடா? என்று எண்ணினான். வெறும் மூணு சென்ட் தான் அது. அதனையே அவனால் தாங்க முடியவில்லை. இவன் பார்த்து விட்டு கொஞ்ச துாரம் தான் போயிருப்பான். சன்ஷேடு தொப்பென்று விழுந்துவிடும். அந்தப் பார்வைக்கு அத்தனை எபக்ட். அந்த அம்மாவிடம் ஆயிரம் சேலை இருக்கும். ஆனாலும் பக்கத்து வீட்டுப் பெண்ணின் புதுச்சேலையைப் பார்த்தவுடன் ம்.... நானுந்தான் கடை கடையா ஏறி இறங்கினேன். இப்படியொரு டிசைன் கிடைக்கவேயில்லையே! என்பாள். புதுச்சேலை கட்டிய பெண் வீட்டிற்குள் நுழையும் போது கதவில் நீட்டியிருந்த பகுதியில் பட்டு சேலை டர்ரெனக் கிழிந்து தொங்கும். ஏன் இப்படி இந்த மக்கள்... இவர்கள் மனங்களில் உள்ள பொறாமைச் சிந்தனைக்கு அத்தனை சக்தி.
    கிராமங்களில் கேட்பார்கள். அவனையா பாத்துட்டு போன?...ஏன் எனக் கேட்டால் அவனைப் பார்த்துப் போனா எப்படி விளங்கும் என்பார்கள். காரணம் எதிர்மறை எண்ணங்களும், பொறாமைச் சிந்தனை உடையவர்களைப் பார்த்தாலே செயலில் வெற்றி பெறுவது என்பது கடினம். சிலர் குழந்தைகளுக்குக் கொடுக்கும் பால்பாட்டிலுக்குக் கூட உறை போட்டிருப்பார்கள். காரணம் யாரும் கண் வைத்துவிடக் கூடாதே என்பதற்காக... பொதுவாக யார் சாப்பிட்டாலும் அடுத்தவர் பார்க்கக் கூடாது என்பதும் இதனால் தான். பொது விருந்துகளில் வேறு வழியில்லை. ஆனாலும் நம் அருகில் உணவு உண்பவர் நம்மை நேசிப்பவராக இருத்தல் நலம்.
    ஒரு விவசாயி பயிர் செய்தார். நெல்லை விடக் களைகளே அதிகமாக இருந்தது. நம் சிறப்புப் பார்வைக்காரர் ஒருவரை அழைத்து வந்து காட்டினால், இத்தனை களைகளா? என்பார். களைகள் எல்லாம் பட்டுப்போய் விடும். நெல் பிழைக்கும் என்றுக் கணக்குப் போட்டுக் கொண்டு அவரை அழைத்துச் சென்றார்கள். நமது சிறப்புப் பார்வை நபரும் அங்கு வந்து வயலைப் பார்த்தார். அட! இவ்வளவு களைகளுக்குள் இத்தனை நெற்பயிரா? என்றார். உடனே இருந்த கொஞ்சம் நெற்பயிரும் பட்டுப் போயிற்று.
    காரணம் பொறாமைச் சிந்தனைக்காரர்களுக்கு நல்லனவே எண்ண வராது. எண்ணவும் முடியாது. பொறாமை என்பது நிகரற்ற பாவி, அந்தப் பாவி தன்னை உடையவனின் செல்வத்தை அழிப்பதுடன் தீய வழியிலும் கொண்டு சேர்க்கும்.
    இந்தப் பொறாமைக் குணம் உடையவர் வேறோங்கோ இருப்பார்கள் என்று கருத வேண்டாம். தாயைத் தவிர வேறெந்த உறவும் இதற்கு விலக்கல்ல என்றே கூறலாம்.
    எப்படி இந்த பொறாமை வருகிறது? தன்னைத் தானே பெருமையாக எண்ணிக் கொள்ளுதல், தன்னைப் பற்றி வீண் பெருமை பேசுதல், பிறரைப் பற்றி துச்சமாக எண்ணுதல், துச்சமாக மதித்தல், பிறரின் முன்னேற்றம் கண்டு வெறுப்படைதல், பிறரிடம் உள்ள உயர்ந்த குணம், கல்வி, செல்வம், புகழ், பதவி ஆகியவற்றைக் கண்டு மனம் புழுங்குதல். இதன் காரணமாக வெறுப்பான சொற்களையே பேசுதல், தவறுகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அற்பமாக எண்ணுதல், மாற்றுக் கருத்து உடையவர்களை சகித்துக் கொள்ள இயலாமல் தாக்குதல் போன்ற குணங்களின் வெளிப்பாடே ஆகும்.
    பொறாமை என்றாலே நமக்கு உடனே நினைவிற்கு வருவது துரியோதனன் தான். காரணம் அவன் பிறப்பே பொறாமையால் தான் வந்தது. உடல் ஊனமுற்றவர்களுக்கு மன்னராகும் தகுதி கிடையாது என்பது சட்டமாக இருந்த காலம் அது. எனவே பார்வையற்றவராக இருந்த திருதிராஷ்டினனுக்கு மன்னர் பதவி கிடைப்பதில் சிக்கல். எனினும் தம்பி பாண்டு தனக்கு மன்னர் பதவி வேண்டாம். அண்ணனே அரசாளட்டும் எனச் சொல்ல பீஷ்மரும் திருதிராஷ்டிரனை மன்னனாக ஆக்குகின்றார். கண்ணில்லாமல் இருக்கின்றோம் என்ற சுய பச்சாதாபம். பதவி நேராகக் கிடைக்காமல் தம்பியால் விட்டுக் கொடுக்கப்பட்டதே என்ற விரக்தி. இது ஒரு புறம் பொறாமையை துாண்டியது.
    குந்திதேவிக்குத் தர்மர் பிறந்துவிட்டார் என்பதை அறிந்த காந்தாரி, ஒரு பெரிய பாறாங்கல்லினால் தனது வயிற்றில் அடித்துக் கொள்ள, கருச்சிதைந்தது. அடுத்த வீட்டுக்காரி ஆம்பளப் புள்ள பெத்துக்கிட்டான்னு, எதிர்த்த வீட்டுக்காரி இடிச்சுகிட்டு நின்னாளாம்னு ஒரு பழமொழி இதனால் தான் வந்ததோ?
    பகவான் வேத வியாசர் ஓடி வந்து சிதைந்த கருவினை உரிய முறையில் மண்பாண்டங்களில் இட்டு நிரப்பி, உரிய காலம் வரை பாதுகாத்து பிள்ளைகளைப் பெறச் செய்தார். இன்றைய ப்ரீமெச்சூர் பேபி, டெஸ்ட்டியூப் பேபி எல்லாம் நம்மிடம் போன யுகத்திலேயே இருக்கிறது. இதனால் முதல் டெஸ்ட்டியூப் பேபியான துரியோதனன் பிறக்கும் போதே பொறாமையுடன் பிறந்தான். காரணமில்லாமல் பாண்டவர் மீது பகை கொண்டு அவர்களிடம், அவர்களின் தேசத்தை சூது போரின் மூலம் அபகரித்தான். பிறர் பொருளை அபகரித்தவன், அவர் பொறாமையின் காரணமாக வேதனைக்குள்ளாக்கியவன் தானே கடைசியில் அழிந்து போனான் என்பது வரலாறு. பொறாமையுடையவர்க்கு தீங்கு செய்ய பகைவரே வேண்டாம். பொறாமையே போதுமானது என்பது வள்ளுவம்.
    பொறாமைக் குணம் மனிதனை வாழ விடாதது மட்டுமல்ல. அனுபவிக்கவும் விடாது. ஒரு பாடல் கச்சேரிக்குச் சென்றால் பாடகர் பாடுவரைக் கேட்பதை விட அவர் எந்த இடத்தில் பிழை செய்கின்றார். அவரை எப்படிக் குறை சொல்லலாம், மட்டம் தட்டலாம் என்று இருந்தால் பாடலை எப்படி ரசிக்க முடியும்? சாப்பிடுவதிலும் அப்படித்தான். மழை பெய்தால் மழையைத் திட்டுவார்கள். வெயில் அடித்தால் வெயிலைத் திட்டுவார்கள். பொறாமைக்காரர்களின் மனம் எப்போது நிம்மதியற்றே காணப்படும். ஒரு குரங்கு மரத்தில் இருந்த பழத்தைக் கவ்விக் கொண்டு மரத்தில் மேலே அமர்ந்தது. கீழே சிறிய நீர்நிலை. அதில் வாயில் பழத்துடன் குரங்கின் உருவம் தெரிந்தது. குரங்கு அந்த நிழலைப் பார்த்து விட்டு அதன் வாயிலும் பழமா? பறித்துவிடுவோம் என்றெண்ணித் தண்ணீரில் பாய்ந்தது. பாவம், நிழல் என அறியாமல் பொறாமையால் வீழ்ந்த போது இதன் வாயில் ஏற்கனவே இருந்த பழமும் பறிபோய்விட்டது.
    அவ்வியம் பேசி, அறம் கெட நில்லன்மின் எனத் திருமூலரும், அவ்வியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு எனக் கொன்றை வேந்தனும் உரைக்கின்றது. பொறாமையால் நிம்மதியான வாழ்வும் கிடையாது. நல்ல துாக்கமும் கிடையாது. நாளடைவில் பிறரைப் பார்த்துப் பொறாமைப்பட்டு கடைசியில் முகமே இருளடைந்து போய்விடும்.
    மகிழ்ச்சியாக ஆனந்தமாக வாழ வேண்டுமா? முதலில் பரந்த மனப்பான்மை வேண்டும். இறைவன் நமக்குக் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க இயலாது. இறைவன் நமக்கு மறுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க இயலாது என்பது புரிந்தால் சர்வகாலமும் மகிழ்வாக இருக்கலாம். கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. உடம்பு பூராவும் எண்ணையைத் தடவிகிட்டு ஆத்துமணல்ல உருண்டாலும் ஒட்டுற மண் தான் ஒட்டும் என்பார்கள். ஆம், எத்தனை தலைகீழாக நின்றாலும் நமக்குக் கிடைக்க வேண்டியது தான் கிடைக்கும்.
    ஒரு பக்தன் தினசரி பெருமாளிடம், எங்கள் குடும்பத்தைக் காப்பாற்று... எனக் கேட்டுக் கொண்டே இருப்பான். சுவாமியும் மவுனமாய் சிரித்துக் கொண்டே இருப்பார். பக்தனின் ஏழ்மை நிலையைக் கண்ட தாயார், பெருமாளிடம் ஏன் சுவாமி! இந்த ஏழை பக்தனுக்குச் செல்வத்தை வழங்கக் கூடாதா? எனக் கேட்டார். அதற்குப் பெருமாளோ தேவி! இந்தப் பிறவியில் இவனுக்கு செல்வத்தை அனுபவிக்கும் பேறு கிடையாது. எனவே கொடுக்கவில்லை என்றார். ஆனால் தாயாரே நீங்கள் கொடுக்கவில்லை என்றால் என்ன? நான் கொடுக்கிறேன் என்றார். பெருமாளும் சிரித்துக் கொண்டு இருந்துவிட்டார். தாயார் ஒரு பெரியமூட்டையில் தங்கக் காசுகள், நகைகள் ஆகியவற்றை கட்டி, அந்த ஏழை நடந்து வரும் பாதையில் போட்டார். அந்த மூட்டைக்கு பக்கத்தில் வந்த போது அவனுக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. கண்ணில்லாதவர்கள் உலகில் எப்படி நடக்கின்றார்கள். நாமும் கண்ணை மூடிக் கொண்டு நடந்து பார்ப்போம் என்று கண்களை மூடிக் கொண்டு அந்த மூட்டையைக் கடந்து வெகுதூரம் நடந்து வந்துவிட்டான். பின்னர் கண்களை திறந்து அட! நம்மால் கூட இவ்வளவு தூரம் நடக்க முடிகிறதே என்று வியந்தான்.
    பெருமாள் சிரித்துக் கொண்டே தாயாரைப் பார்த்தார். தேவியும் அவனுக்குப் பேறு இல்லாததை எண்ணி வியந்தாள்.
    ஆம். கடவுள் நமக்கு கொடுத்ததை வைத்துக் கொண்டு மகிழ்வாக வாழ்ந்தால் போதும். யாரையும் எக்காலமும் ஒப்பிடக் கூடாது. தூய அன்பைச் செலுத்தப் பழக வேண்டும். இப்படி வாழப் பழகினால் பொறாமை எண்ணம் தோன்றாது. பொறாமைப்படக்கூடாது எனச் சொல்லாமல் ஏன் பேசேல் என்றாள் மூதாட்டி.
    பொறாமை எண்ணத்துடன் வாழ்பவர்கள் வெளியில் நல்லவர்கள் போல நடித்து அறம் பேசுகிறார்களே, அதனால் தான் பொறாமை கொள்ளாதே, நல்லவனைப் போல் மனதில் வஞ்சகத்தை வைத்துக் கொண்டு பேசாதே என்றாள்.
    “அவ்வியம் பேசேல்” பொறாமைக் குணத்தோடு (அறம்) பேசாதே என்பது அவ்வையின் வாக்கு. காற்றும், வானும், கடலும் போல விரிந்த மனத்திற்குச் சொந்தமாவோம். மகிழ்வோடு வாழ்வோம். பிறரையும் மகிழ்வோடு வாழ வைப்போம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar