1978ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கர்நாடகாவில் உள்ள ஹம்பி, ஆனேகுந்தி பகுதிகளுக்கு யாத்திரை சென்றார் மஹாபெரியவர். அங்குள்ள சிந்தாமணி மடத்தில் அன்னபூரணி அம்மனுக்கு வழிபாடு நடத்த ஏற்பாடானது. தொண்டரான திருவாரூர் வெங்கட்ராம அய்யரிடம் அந்த பணி ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் சபரி ஆசிரமம், பம்பா சரஸ் பகுதிகளை தரிசிக்கச் சென்ற மஹாபெரியவர் மடத்திற்கு திரும்பினார். அப்போது தொண்டர் ஒருவர், ‘‘வெங்கட்ராம அய்யர் உடல்நலமின்றி உயிருக்கு போராடுகிறார். மஹாபெரியவரே தனக்கு சந்நியாசம் அளித்து மறுவாழ்வு தர வேண்டும் என்று வேண்டுகிறார்’’ என்றார். ஏகாம்பரம் என்ற தொண்டரை அழைத்து, ‘‘வெங்கட்ராமனுக்கு சன்னியாசம் கொடுக்க உடனடியாக ஏற்பாடு செய்’’ என உத்தரவிட்டார் பெரியவர். அதன்பின் வெங்கட்ராம அய்யரிடம், ‘‘சன்யாசம் வாங்கி கொள்கிறாயா’’ எனக் கேட்க,‘‘அதற்காகவே இத்தனை நாளா காத்திருக்கேன் பெரியவா’’ என்றழுதார். வெங்கட்ராம அய்யரின் தலை மழிக்கப்பட்டது. சன்யாச சடங்குகளை நடத்த நாராயணபட் என்ற பண்டிதர் வரவழைக்கப்பட்டார். உடல்நலம் இல்லாத நிலையிலும் துங்கபத்ரா நதியில் நீராடி காவி உடுத்தி, கையில் தண்டம் ஏந்தினார். இதன்பின் ‘திருவாரூர் சுவாமிகள்’ எனப் பெயர் பெற்றார். சந்நியாசம் பெற்றதும் மறுபிறவி எடுத்தது போல மாறி விட்டாரே என அங்கிருந்த அனைவரும் அதிசயித்தனர். இதன் பின்னர் 1986ம் ஆண்டில் திருவாரூர் சுவாமிகளையும், அவருக்கு உதவியாக பூதனுார் பாப்பா என்னும் பக்தரையும் திருவாரூருக்கு அனுப்பி வைத்தார் மஹாபெரியவர். திருவாரூர் சுவாமிகள் முக்தி பெற்றபின் சமாதி அமைக்க காலிமனையை வாங்கும்படியும் கூறினார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமையும் ஏகாதசி திதியும் கூடிய ஒரு நல்ல நாளில் திருவாரூர் சுவாமிகள் முக்தியடைந்தார். அவரை எங்கு அடக்கம் செய்வது என தெரியாமல் பாப்பா காஞ்சி மடத்திற்கு தொடர்பு கொண்டார். சொந்த ஊரான பூதனுாரிலேயே சமாதி வைக்குமாறு மஹாபெரியவர் தெரிவித்தார். அதன்படியே செய்ய அந்த இடம் பாப்பாவுக்கு சொந்தமானது என்பது பின்னரே தெரிந்தது. இறக்கும் தருவாயில் இருந்த ஒருவருக்கு எட்டு ஆண்டுக்கு முன்பே சன்னியாசம் அளித்து மீண்டும் வாழ வைக்கும் மஹாபெரியவரின் தீர்க்க தரிசனத்தை யாரால் விவரிக்க முடியும்?