கூடை நிறைய மலர்கள் இருந்தாலும் ஈ என்ன செய்யும்.. குப்பையை நோக்கித்தான் செல்லும். அதுதான் அதன் இயல்பு. அது போன்றதுதான் நமது மனமும். தீய பழக்கங்களுக்கு எளிதாக அடிமையாகிவிடும். அதிலிருந்து தப்பிக்க நிச்சயம் ஒரு சக்தி தேவைப்படும். அதுதான் மாரியம்மன். அவள் எங்கே இருக்கிறாள்.. எனத்தேடினால் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி வலசில் அருள்புரிகிறார். தனக்கு முன் எவ்வளவு குப்பை இருந்தாலும் மணமுள்ள பூக்களை நோக்கித்தான் தேனீ பயணிக்கும். வாசமலரில் நேசமாய் அமரும். தேனைக் கவனமாய் எடுக்கும். தேன் போன்ற நல்ல பழக்கங்கள் உங்களுக்கு வேண்டுமா. பறந்து வாருங்கள் மாரியம்மன் கோயிலுக்கு. சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் அம்மன். சன்னதியை நெருங்க நெருங்க கற்பூரம், எலுமிச்சை வாசனையும் நம்மோடு சேர்ந்து பயணிக்க ஆரம்பிக்கும். பலவித நிறங்களால் ஆன அம்மன் சேலை கண்களுக்கு விருந்தளிக்கும். அம்மனின் அழகை எவ்வித கவிதை வார்த்தைக்குள்ளும் அடக்க முடியாது. கருணையும், தாய்மையும் ஒருங்கே அமைந்த முகம். அலங்காரத்தின் உச்சக்கட்டம்தான் அம்மன். மனம் முழுக்க குழப்பம். கண்கள் முழுக்க கண்ணீர் என உங்கள் உள்ளத்தில் இருக்கும் வலிகளை அம்மனிடம் கூறுங்கள். அவள் செவிசாய்ப்பாள். தல விருட்சமாக அரசமரம் உள்ளது. அதற்கு அருகே விநாயகரும் உள்ளார். அவரிடமும் நல்ல புத்தி வேண்டி ஒரு விண்ணப்பத்தை வையுங்கள். நீங்கள் வந்த வழியை வைத்துத்தான் அம்மன் இனி வரப்போகும் வழியை திறந்துவிடுவாள். நல்ல மனதுடன் பிரகாரத்தில் நடந்து வாருங்கள். பிரச்னைகளை எல்லாம் கடந்து வருவீர்கள். பிறகு பாருங்கள். எல்லா நாளும் நல்ல நாளாகத்தான் அமையும். திருவிழாவின்போது காவேரி ஆற்றிலிருந்து பக்தர்கள் கொண்டு வரும் தீர்த்தத்தால் அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்படும். ஏனெனில் காவிரி ஆறும் நமக்கு ஒரு தாய்தானே! காவிரித்தாயால் நமது வயிறு நிறைகிறது. மாரித்தாயால் நமது மனம் நிறைகிறது. அதுதானே உண்மை. –––– எப்படி செல்வது: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து 4 கி.மீ.,