அவிநாசி: ஆடிப்பூரத்தை முன்னிட்டு, அவிநாசி ஸ்ரீகரிவரதராஜப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவ உற்சவம் நடைபெற்றது.
கொங்கு சிவஸ்தலங்களில் முதன்மையான அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் உபகோவிலான ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில் காலையில் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலையில் திருக்கல்யாண உற்சவ நிகழ்வில் காப்பு கட்டுதல், புருஷ சுத்த ஹோமம், பட்டு வஸ்திரங்கள் அணிதல், கன்னியாதானம் நிகழ்வுகள் நடைபெற்றது. இதனையடுத்து, மேளதாளங்கள் முழங்க சீர்வரிசைகள் எடுத்து வரப்பட்டு, மாலை மாற்றுதலுடன், உலக நன்மைக்காக நோய் தொற்று இல்லா சுபிட்ச வாழ்வை அளித்திடும் வரங்கள் வேண்டி திருமாங்கல்ய நிகழ்வு நடைபெற்றது. அதன் பின்னர் வாரணம் ஆயிரம் உபச்சாரம், தீபாராதனை உள்ளிட்டவைகள் நடந்தது. இதனையடுத்து பக்தர்களுக்கு தீர்த்தம், ஜடாரி, மஞ்சள் கொம்புடன் கயிறு, வளையல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.