திட்டக்குடி வதிஷ்டபுரம் அரங்கநாதபெருமாள் கோவிலில், ஆடிப்பூர திருக்கல்யாண விழா, வினாயகர் பூஜையுடன் துவங்கியது. விழாவையொட்டி பக்தர்கள் திருக்கல்யாண சீர்வரிசை எடுத்துவந்தனர். இரவு ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், திருக்கல்யாண சிறப்பு ஹோமமும் நடந்தன. ஆண்டாள் நாச்சியார், ரங்கநாதபெருமாள் சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் வேத மந்திரங்கள் முழங்க துவங்கியது. கங்கணம் கட்டுதல், பூணூல் அணிதல் உள்ளிட்ட திருமண நிகழ்வுகள் நடந்தன. சுவாமிகளுக்கு மாலைமாற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, திருமாங்கல்ய தாரணம் நடந்தது. ஆண்டாள் நாச்சியார், ரங்கநாத பெருமாள் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து பூப்பந்து விளையாட்டு, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு மங்கள கயிறு வழங்கப்பட்டது. திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது. வைணவ செம்மல் வரதசிங்காச்சாரியார், கோவில் பட்டாச்சாரியார் ராகவன் நிகழ்ச்சியை செய்துவைத்தனர்.