பதிவு செய்த நாள்
02
ஆக
2022
05:08
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆடிப்பூரம் வைபவம் நடைபெற்றது.
வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்களில், ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடி மாத பூர நட்சத்திரத்தில், வைணவ திருத்தலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். காரமடை அரங்கநாதர் கோவிலில் நேற்று ஆடிப்பூரம் வைபவம் நடைபெற்றது. கோவில் நடை திறந்து மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை, ஆண்டாள் சந்நிதியில் விஸ்வக்சேனர் பூஜை, லட்சுமி நாராயணன், புண்ணியா வசனம், கலச ஆவாஹனம், மூலவர் மற்றும் உற்சவருக்கு ஸ்தபன திருமஞ்சனம் ஆகியவை நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் வெண்பட்டு குடை சூழ, ரங்க மண்டபத்தில் ஆண்டாள் உச்சமூர்த்தி எழுந்தருளினார்.
அங்கு அவருக்கு அரங்கநாத பெருமாளிடம் இருந்து, சடாரி பரிவட்டம் மரியாதை செய்யப்பட்டது. கோவில் ஸ்தலத்தார் வேதவியாசர் ஸ்ரீதர் பட்டர், திருமலை நல்ல சக்கரவர்த்தி ஆகியோர், ஆண்டாள் இயற்றிய நாச்சியார் திருமொழி என்னும் திவ்ய பிரபந்த பாசுரங்களை சேவித்தனர். தொடர்ந்து ஆண்டாள் சூடிய மாலையை அரங்கநாத பெருமாளுக்கு சூட்டப்பட்டது. மீண்டும் ஆண்டாள் மேள வாத்தியங்கள் முழங்க, திருக்கோவில் பிரகாரத்தில் வளம் வந்து, சன்னதி அடைந்தார். உச்சி கால பூஜை, சாற்று முறை, மங்கள ஆரத்தி வைபவம் நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபத்தில் அர்ச்சகர்கள் சுரேஷ் நாராயணன், திருவேங்கடம், ராஜா, ஹரி மற்றும் மிராசுதாரர்கள், பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர். விழா ஏற்பாட்டு கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.