பொதுவாக ஆடி மாதத்தையும், மார்கழி மாதத்தையும் பீடை மாதம் என்று சொல்வார்கள். ( ஆனால் என்னை பொருத்தவரை சுபிட்சம் தரும் மாதங்கள் இவை) ஆனால், 18ஆம் பெருக்கு என்பது அந்த மாதிரி கிடையாது. ஆறு என்றால் நீர் பெருக்கெடுத்து ஓடும். அப்பொழுதெல்லாம் பருவ மழை மிகச் சரியாகப் பொழிந்தது. ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப அந்த நேரத்தில் மழை இருந்தது. சித்திரை, வைகாசி, ஆணி இந்த மூன்று மாதங்களில் இருக்கக்கூடிய காய்ச்சல் முடிந்து ஆடி மாதத்தில் நன்றாக மழை பொழிந்து எல்லா விளை நிலங்களும் விதைக்கப்படக் கூடிய அளவிற்கு புது வெள்ளம் - ஆடியில் வருவது புதுவெள்ளம், ஐப்பசியில் வருது வேறு வெள்ளம் - இந்த புதுவெள்ளத்துடன் வரக்கூடியதுதான் ஆடிப் பெருக்கு.
இதுமட்டுமல்லாமல், ஆடி பதினெட்டாம் பெருக்கைப் பற்றி சிலப்பதிகாரம் பேசுகிறது. சங்க நூல்களில் பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள். இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேடமானது. பெருக்கெடுத்து ஓடிவரும் அந்த புதுவெள்ளம், புது நீர் வரும்போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது. நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக்கொள்வது. சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.
இந்த மாதிரி 18ஆம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. அதனால் ஆடி 18ஆம் தேதி மிகவும் முக்கியமானது. பெருக்கு என்றால் பெருகுவது என்று அர்த்தம். ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். காவிரி பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டு எல்லையான ஒகேனக்கல்லில் நுழையும்போது தொடங்கி, காவிரி சமுத்திர ராஜனைக் கலக்கும் பூம்புகார் வரையிலும் இருக்கிற மக்களால் கொண்டாடப்படும் பெருந்திருவிழா இந்த ஆடிப்பெருக்கு. தங்களை வாழவைக்கும், வளப்படுத்தும் காவிரியை அதன் கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் சிறப்பிப்பதற்காகத் துவங்கப்பட்ட இந்த விழா இன்று ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் எல்லாத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.