உத்தர பிரதேசம் பல்ராம்பூர் மாவட்டம் துல்சிபூரில் தேவிமா பாடேஸ்வரி என்னும் பெயரில் அம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மனுக்கு பதான் என்றும் பெயருண்டு. சித்தர்கள் வழிபட்ட தலம் என்பதால் சித்த சக்திபீடம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தரிசிப்போருக்கு துணிச்சல், நீண்ட ஆயுள், செல்வம் சேரும். கிரக தோஷம் நீங்கும். தட்சனின் மகளான தாட்சாயிணி தந்தையின் எதிர்ப்பை மீறி சிவனை திருமணம் செய்தாள். சிவன் மீது வெறுப்பு கொண்டான் தட்சன். தான் நடத்திய யாகத்திற்கு மருமகனை அழைக்கவில்லை. வருந்திய தாட்சாயிணி நியாயம் கேட்க தட்சனோ அவமானப்படுத்தினான். அதை பொறுக்க முடியாத அவள் யாகத்தீயில் விழுந்து உயிர் விட்டாள். மனைவியின் உடலைத் தோளில் சுமந்தபடி சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடினார். இதையறிந்த மகாவிஷ்ணு சக்கரத்தால் தாட்சாயிணியின் உடலை 51 கூறுகளாக வெட்டி நாடெங்கும் சிதற விட்டார். அவளின் வலதுபுற தோள்பட்டை இத்தலத்தில் விழுந்தது. அங்கு கோயில் கட்டப்பட்டது. பாண்டவர்கள் வாழ்ந்த துவாபர யுகத்திலேயே இந்த அம்மன் கோயில் இருந்தது. வள்ளலான கர்ணன் தன் தந்தையான சூரியனுக்காக வெட்டிய குளம் இங்குள்ளது. இதில் நீராடுவோருக்கு தோல் நோய் உள்ளிட்ட நோய் அனைத்தும் தீரும். மன்னர் விக்ரமாதித்தன், ஸ்ரவந்தி மன்னர் சுகல்தேவ் திருப்பணி செய்துள்ளனர். தற்போது பல்ராம்பூர் மன்னர் குடும்பத்தின் பராமரிப்பில் கோயில் உள்ளது. கருவறையில் அம்மனின் சிலை சலவைக்கல்லால் ஆனது. எட்டு கைகளுடன் திரிசூலம், வாள் தாங்கியபடி கம்பீரமாக உள்ள அம்மனுக்கு முன்பு சிவலிங்கம் ஒன்றும், இரண்டு குடைகளும் உள்ளன. சித்ராபஞ்சமி, நவராத்திரியின் போது தங்கக் கவசத்தில் ஜொலிக்கிறாள். சைத்ர மாதத்தில் (ஏப்ரல், மே) நடக்கும் சோப யாத்ரா விழா சிறப்பானது. சித்தர்களான சித்தரத்னாத், கோரக்நாதர் முக்தி பெற்ற தலம் இது. இக்கோயிலுக்கு நேபாள நாட்டினர் அதிகளவில் வருகின்றனர். எப்படி செல்வது * துல்சிபூரில் இருந்து 2 கி.மீ., * பல்ராம்பூரில் இருந்து 25 கி.மீ.,