கடந்த காலம் செல்லாதகாசோலை. எதிர்காலம் வாக்குறுதிச்சீட்டு. நிகழ்காலம் கையில் உள்ள பணம் போன்றது. பணத்தை இழந்தால் திரும்பப்பெற வாய்ப்பு அதிகம். ஆனால் காலத்தை திரும்பப்பெற எள்ளளவும் வாய்ப்பு கிடையாது. எனவே காலத்தை பயனுடையதாக செலவழிக்க வேண்டும். நேரம் என்பது நாளொன்றுக்கு 24 மணி எனவும், அதனையே1,440 நிமிடங்களாகவும், 86,400 வினாடிகளாகவும் வரையறுத்துள்ளனர். எல்லோருக்கும் பொதுவான, சமமான காலத்தைச் சரியாக திட்டமிடாதவர்கள் பணிக்கு நேரம் குறைவாக உள்ளது என்றும், நேரம் அதிகமாக உள்ளது என்றும் சிலர் கூறுவர். கல்வி, வேலை, வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொரு நாளும் தமக்குக் கிடைக்கும் நேரம் எவ்வளவு. அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம், தினந்தோறும் சுயதேவைகளுக்கும், உறக்கத்திற்கும் எடுத்துக்கொள்ளும் கால அளவு என்ன என அட்டவணைப்படுத்தினால் அனைவரும் காலத்தை சரியாக பயன்படுத்த முடியும்.