பதிவு செய்த நாள்
10
ஆக
2022
01:08
ஊத்துக்கோட்டை : சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், வரும் 21ம் தேதி, மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதால், பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய முடியாது என, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த, சின்னம்பேடு ஊராட்சி, சிறுவாபுரி கிராமத்தில் உள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். செவ்வாய்க்கிழமையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு தரிசனம் செய்வர். கடந்த 2003ம் ஆண்டு இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. இதை சீரமைக்க முடிவெடுத்து, கடந்தாண்டு முதல், சீரமைக்கும் பணி துவங்கியது. மூலவர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி, விநாயகர் சன்னதி, பரிவார சன்னதிகள்,ராஜகோபுரம் ஆகியவை புதுப்பித்தல், மதில்சுவர் சீரமைத்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், பக்தர்கள் வரிசையில் செல்ல க்யூ அமைத்தல், குடிநீர் வசதி ஆகியவை ஒரு கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இறுதி கட்டப் பணிகள் நடந்து வரும் நிலையில், வரும் 21ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த நாள் குறிக்கப்பட்டு உள்ளது. கும்பாபிஷேக பணிக்காக, யாக சாலை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. தற்போது பாலாலயம் செய்யப்பட்டு உள்ளதால், கும்பாபிஷேகம் முடியும் வரை மூலவரை தரிசனம் செய்ய இயலாது என, கோவில் நிர்வாகம் பேனர் வைத்து தெரிவித்து உள்ளது.