பதிவு செய்த நாள்
12
ஆக
2022
01:08
புவனகிரி: மகான் ஸ்ரீ ராகவேந்திரர் பிறந்த புவனகிரியில் 35 வது ஆண்டு ஆராதனை விழா, ஸ்ரீ ராகவேந்திரசுவாமிகள் புனித தொண்டு அறக்கட்டளை சார்பில் இன்று காலை பல்வேறு அபிஷேகங்களுடன் துவங்கியது. மகான் ஸ்ரீ ராகவேந்திரர் பிறந்த கடலுார் மாவட்டம், புவனகிரியில் ஆராதனை விழா கடந்த 34 ஆண்டுகளாக வெகுவிமர்சியாக நடந்து வருகிறது. தற்போது 35 வது ஆராதனை விழா உபயதாரர் பாண்டுரங்கன் குடும்பத்தினர் சார்பில், இன்று 12ம் தேதி காலை 9.00 மணிக்கு பூர்வ ஆராதனையுடன் விழா துவங்கியது. மந்தராலய மரபின் படி பல்வேறு திரவியங்களால் அபிஷேகம்,சுவேத நதி தீர்த்தத்துடன் நடந்தது. பகல் 1.00 மணிக்கு பல்வேறு பூஜைகளுக்குப் பின் மகான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை கவுரவ தலைவர் சுவாமிநாதன், தலைவர் ராமநாதன், செயலர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேலு செய்திருந்தனர். பூஜைகளை நரசிம்மாச்சாரியார் புதல்வர்கள், ரகு, ரமேஷ் ஆச்சாரியார் குழுவினர் செய்தனர். நாளை 13 ம் தேதி பூர்வ ஆராதனையை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 27 பேரும், 14 ம் தேதி உத்திர ஆராதனையை கோமளவள்ளிராமசாமி, கலியமூர்த்திபூமா, வீரராகவன் மற்றும் ராஜகோபால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகைளச் சேர்ந்த 21 பேர் பங்களிப்பாக நடக்கிறது.