யானைகள் தினம்: திருக்கடையூர் கோவில் யானை அபிராமிக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2022 04:08
மயிலாடுதுறை: யானைகள் தினத்தை முன்னிட்டு திருக்கடையூர் கோவில் யானை அபிராமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானம் பங்கேற்று சிறப்பு பூஜை செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் காலசம்ஹார மூர்த்திதனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மார்க்கண்டேயனுக்காக சுவாமி எமனை சம்ஹாரம் செய்த தலமாதலால் அட்டவீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. யானைகள் தினத்தை முன்னிட்டு கோயிலில் உள்ள 18 வயதுடைய யானை. அபிராமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மகேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான்சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் யானை அபிராமிக்கு சிறப்பு கஜ பூஜையை செய்தார், அப்போது வஸ்த்திரம், மாலை அணிவிக்கப்பட்டு தீபாரதனை செய்யப்பட்டது. தொடர்ந்து யானை அபிராமிக்கு காய்கறிகள் பழவகைகள் உணவாக வழங்கப்பட்டது. தொடர்ந்து தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவிலில் அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினார் அப்போது சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காலசம்ஹாரமூர்த்தி வெண்பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்திலும், அம்பாள் நவரத்தின அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இந்நிகழ்ச்சியில் மயிலம் பொம்மபுர ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பூஜைகளுக்கான ஏற்பாடுகளை திருமடத்தில் தலைமை கண்காணிப்பாளர் மணி செய்திருந்தார்.