பதிவு செய்த நாள்
20
ஆக
2022
09:08
நாகர்கோவில்: ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாகராஜா கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம்.
குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை மிக விசேஷமான நாளாகும். இந்த நாளில் நாகராஜாவை வழிபட்டால் நாகதோஷம் நீங்குவதுடன், திருமணதடை நீங்கும் என்பது ஐதீகம். மேலும், சரும நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை நிகழ்வதால் ஆவணி ஞாயிற்றுகிழமைகளில் இக்கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் வரும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நாகராஜா கோவிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.
நாளை ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகும். இதையொட்டி, அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் நாகராஜா கோவிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அன்றைய தினம் அதிகாலை4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன . நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடை பெறுகிறது. மேலும், மதியம் அன்னதானமும் வழங்கப்படுகிறது. பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கம்புகள் கொண்டு ஒருவர் பின் ஒருவராக செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்ட்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவை யான குடிநீர் வசதி, கழிவரை வசதி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில், ரூ.400க்கு பிரசாத பை ஆவணி ஞாயிற்று க்கிழமைகளில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ஒரு லிட்டர் பால் பாயாசத்துடன் தேங்காய் பழம் மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது.