பதிவு செய்த நாள்
29
ஆக
2022
04:08
வடவள்ளி : மருதமலை அடிவாரத்தில் புதிய முடி காணிக்கை மண்டபம் கட்டும் பணியை, காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து வந்து செல்கின்றனர். இந்நிலையில், இக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மேம்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. கடந்தாண்டு, ஜூலை மாதம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருதமலை கோவிலில் ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின், அடிவாரத்தில் உள்ள கோவிலுக்கு சொந்தமான, 93 சென்ட் இடத்தில், பக்தர்களின் வசதிக்காக முடி காணிக்கை மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, முடி காணிக்கை மண்டபம் கட்ட மண் பரிசோதனை செய்யப்பட்டு, திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்தபடி, தமிழகத்தில் பல்வேறு கட்டடங்கள், பல்வேறு பணிகளை காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். அதில், மருதமலை அடிவாரத்தில், 89 லட்சம் மதிப்பில் முடி காணிக்கை மண்டபம், குளியலறை மற்றும் கழிப்பறை கட்டும் பணியையும், மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான மேல்நிலை பள்ளியில், 26.25 லட்சம் மதிப்பில், மாணவர்களுக்கு உடற்பயிற்சி கூடம், பள்ளியின் சமையலறை மற்றும் உணவருந்தும் கட்டடங்களை பழுது பார்க்கும் பணியையும் முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, மருதமலை அடிவாரத்தில், மருதமலை கோவில் துணை கமிஷனர் ஹர்ஷினி, பூமி பூஜை செய்தார். இந்நிகழ்ச்சியில், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.