பதிவு செய்த நாள்
29
ஆக
2022
04:08
அன்னூர்: வரதையன்பாளையம், கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.
காட்டம்பட்டி ஊராட்சி, வரதையன் பாளையத்தில், 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி, சமேதர கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக கரிவரதராஜ பெருமாள், துவாரக பாலகர்கள், கருடன், ராமானுஜர், தும்பிக்கை ஆழ்வார், லட்சுமி நரசிம்மர், மகாலட்சுமி ஆகியோருக்கு சன்னதிகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா, 27ம் தேதி வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. 28ம் தேதி காலை வேத பாராயணமும், மாலையில் ஹோம பூஜையும், இரவு மூலவர்களுக்கு எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது. இன்று காலை 9:30 மணிக்கு பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து தச தரிசனம் நடந்தது. கரிவரதராஜ பெருமாளுக்கு, மதியம் பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அன்னூர், காரமடை, கோவை, புளியம்பட்டி பகுதியில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.