தொலைந்த பொருள் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்ததால் ஏற்பட்ட பெயர் இது. இவர் கோவை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருக்கிறார். தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர், தன் நண்பரான சேரமான் பெருமாள் நாயனாரிடம் பொன்னும் பொருளும் பெற்றுக் கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் திருவிளையாடல் புரிய திருவுள்ளம் கொண்டார் சிவன். சிவ கணங்களை வேடர் வடிவில் அனுப்பி, சுந்தரரிடம் வழிப்பறி செய்ய ஆணையிட்டார். திருமுருகன்பூண்டி என்ற தலத்துக்கு செல்லும் வழியில் வேடர்களிடம் பொன்னை இழந்தார் சுந்தரர். தனக்கு உதவும்படி சிவபெருமானிடம் முறையிட, அவரும் தன் மூத்தமகனான விநாயகரிடம் பொறுப்பைக் கொடுத்தார். சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருள் இருக்கும் இடத்தைக் காட்டினார் விநாயகர். அதனால் இவர் ‘கூப்பிடு விநாயகர்’ எனப் பெயர் பெற்றார். பொருளை இழந்தவர்கள் கூப்பிடு விநாயகரை வழிபட்டால் அவர் அருளால் தொலைந்த பொருள் கிடைக்கும்.