மகாளய அமாவாசைக்கு ராமேஸ்வரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2022 07:09
மானாமதுரை: மஹாளய அமாவாசைக்கு ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஹிந்துக்களின் புனித தலமான ராமேஸ்வரத்தில் ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையன்று ஏராளமான இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அக்னி தீர்த்தக் கடலில் நீராடி ராமநாதசுவாமியை வழிபட்டு வருகின்றனர்.இவர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் சிறப்பு ரயில்கள் அவ்வப்போது இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் முக்கிய மஹாளய அமாவாசை வருகிற 25ம் தேதி வரவுள்ளது.இதற்காக தென்னக ரயில்வே நிர்வாகம் சென்னை,கோவை,திருச்சி, மதுரை ஆகிய ரயில்வே சந்திப்புகளிலிருந்து ராமேஸ்வரத்திற்கு பயணிகள் ரயில்கள் இயக்க வேண்டும் என்று ஏராளமான பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து ரயில் பயணிகள் மற்றும் பக்தர்கள் சிலர் கூறுகையில்,வருகிற 25ம் தேதி மஹாளய அமாவாசை அன்று ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்திற்கு வருவது வழக்கம்.ஆகவே தென்னக ரயில்வே நிர்வாகம் மேற்கண்ட ரயில்வே சந்திப்புகளில் இருந்து பயணிகள் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.