கூடலுார்: ஓணம் பண்டிகையை வரவேற்கும் விதமாக குமுளி ஊராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட் மீட்டிங் ஹாலில் அத்தப்பூக் கோலம் போடப்பட்டது. கேரளாவில் முக்கிய திருவிழாவான ஓணம் பண்டிகை செப். 7, 8 ல் கொண்டாடப்படுகிறது. அனைத்து மதத்தினரும் ஒருங்கிணைந்து கொண்டாடும் இப்பண்டிகையால் கேரளா களை கட்டும். இதில் முக்கிய பங்கு வகிப்பது அத்தப் பூக்கோலம்.
தங்கள் வீடு தேடி வரும் மகாபலி அரசனை வரவேற்கவே விதவிதமான பூக்களில் அத்தப்பூக் கோலம் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் கேரள பெண்கள். ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் என்பதால் பூக்களின் திருவிழாவாக ஓணம் திருநாள் கேரளாவில் பார்க்கப்படுகிறது. 10 நாட்கள் நடக்கும் விழாவில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை பெண்கள் அழகு படுத்துவார்கள். அந்த வகையில் எல்லை பகுதியான குமுளியில் ஓணம் பண்டிகையை வரவேற்கும் விதமாக ஊராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட் மீட்டிங் ஹாலில் மிகப்பெரிய அத்தப்பூக்கோலம் போட்டு வரவேற்றுள்ளனர்.