மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஆனை மேலகரம் வரதராஜ சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆணை மேலகரம் கிராமத்தில் பழமை வாய்ந்த பூமிநீளா பெருந்தேவிநாயிகா சமேத வரதராஜ சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 5ம் தேதி பூர்வாங்க பூஜையும், 6ம் தேதி காலை முதல் காலை யாகசாலை பூஜையும் தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை 3ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலைகளில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. அதனை அடுத்து வரதராஜ பட்டர் தலைமையிலானோர் பெருமாள் மற்றும் தாயார் சன்னதி விமான கலசங்களுக்கு புனித நீரூற்றி மகா சம்ப்ரோக்ஷணம் எனப்படும் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு சந்தனம் பூசி மாலை அணிவிக்கப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது. அதனை அடுத்து பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர். மாலை கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்த சீதாராமன் தலைமையிலானோர் செய்திருந்தனர்.