நத்தம் மாரியம்மன் கோவிலில் நாக பாம்பு : பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2022 10:09
நத்தம், நத்தம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு மறுநாள் நாக பாம்பு கோவிலைச் சுற்றி வந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர். மேலும் நாக பாம்பு கோவிலுக்குள் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நத்தம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் செப்.7 ஆறு கால யாக பூஜையுடன் அதி விமர்சியாக நடந்தது. இதில் அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு, பெரிய கருப்பன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் மற்றும் பல்லாயிரம் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனை அடுத்து நேற்று கோவிலில் மாலை சுற்று வட்டார பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலர் தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கோவிலின் மூலஸ்தானத்திற்கு பின்புறம் சுமார் மூன்று அடி நீளமுள்ள பாம்பு ஒன்று, கோவிலில் சுற்றி முன்பகுதிக்கு வந்தது. இதனைக் கண்ட அச்சமடைந்த சிலர் பாம்பின் அருகில் சென்று பார்த்த போது அது நாக பாம்பு என தெரிய வந்தது. பின் பாம்பை கண்ட பக்தர்கள் வணங்கினர். பின் அந்தப் பாம்பு கோவிலை சுற்றிவிட்டு சென்றுவிட்டது. கும்பாபிஷேகத்திற்கு மறுநாள் கோவிலில் நாக பாம்பு வந்தது அப்பகுதி மக்களிடையே வேகமாக பரவியது. மேலும் சிலர் அந்த பாம்பை வீடியோ எடுத்து அம்மன் பாடலுடன், அம்மன் பாம்பு ரூபத்தில் காட்சி அளிப்பதாக சமூக வலைதளங்களில் பரப்பினர்.