பதிவு செய்த நாள்
09
செப்
2022
12:09
நங்கநல்லுார் :பழமை வாய்ந்த நங்கநல்லுார் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.சென்னை, நங்கநல்லுார், சர்வமங்களா நகர், ஈஸ்வரன் காலனியில் அமைந்துள்ளது சர்வமங்களாதேவி உடனுறை தர்மலிங்கேஸ்வரர் கோவில். மிகவும் பழமை வாய்ந்த இக்கோவில், ராஜராஜ சோழ மன்னனின் ஆறாவது ஆண்டு ஆளுகைக்காலமான கி.பி., 991ல் தன்மீசர் செம்பொன் கோவில் என்ற பெயருடன் விளங்கியது.கருங்கல் கருவறையுடன் இக்கோவில் விளங்குகிறது.
கடந்த 1976ம் ஆண்டு முதல் நான்கு கும்பாபிஷேகங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் கோவில் திருப்பணிகள் முடிந்த நிலையில், புனருதாரண ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இதை முன்னிட்டு, 2ம் தேதி தேவதா அனுக்ஞை, கிராம சாந்தி நடந்தது. 3ம் தேதி முதல் யாக சாலை வளர்க்கப்பட்டு ஹோமங்கள், கால பூஜைகள் நடத்தப்பட்டன.கும்பாபிஷேக நாளான நேற்று காலை 7:30 மணிக்கு விசேஷ ஸந்தி, ஆறாம் கால யாக பூஜை, அவப்ருத யாகம் வளர்க்கப்பட்டது. காலை 9:30 மணிக்கு மஹா பூர்ணாஹுதியும் அதை தொடர்ந்து யாத்ரா தானம், கடப்புறப்பாடும் நடந்தது.காலை, 11:00 மணிக்கு ராஜகோபுர, விமானங்களுக்கும், காலை 11:30 மணிக்கு சர்வமங்களாம்பிகா சமேத தர்மலிங்கேஸ்வரர் சன்னதி கலசங்களுக்கு கும்ப நீர் சேர்க்கப்பட்டு மஹாகும்பாபிஷேகம் நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.கும்பாபிஷேகத்தை காஞ்சிபுரம் ராஜப்பா சிவாச்சார்யர் நடத்தி வைத்தார். இந்த வைபவத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், ஆலந்துார் மண்டல குழு தலைவர் சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நண்பகல் 12:00 மணிக்கு மஹா அபிஷேகம், ஆச்சார்ய உற்சவம், யஜமான உற்சவம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், இரவு 8:00 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடந்தன.